இந்தியா

பொது இடங்களில் உள்ள கட்சி கொடி கம்பங்களை ஏன் அகற்ற கூடாது? : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி!

Published

on

பொது இடங்களில் உள்ள கட்சி கொடி கம்பங்களை ஏன் அகற்ற கூடாது? : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி!

பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடி கம்பங்களையும் அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று (டிசம்பர் 11) கேள்வி எழுப்பியுள்ளது.

சமீபகாலமாக தமிழகம் முழுவதும் கட்சிக் கொடி கம்பங்கள் வைப்பதில் பிரச்சனைகள் அடிக்கடி எழுந்து வருகின்றன.

Advertisement

இந்த நிலையில் மதுரை விளாங்குடியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சித்தன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், “நானும், எனது மனைவியும் அதிமுக கட்சியில் உள்ளோம். எனது மனைவி நாகஜோதி அதிமுக சார்பில், மாநகராட்சி வார்டு எண் 20ல் போட்டியிட்டு மாநகராட்சி மன்ற உறுப்பினராக உள்ளார்.

அதிமுகவின் 53வது ஆண்டு விழாவை முன்னிட்டு, எங்கள் பகுதியில் உள்ள அதிமுக கொடி கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய கொடி கம்பம் வைப்பதற்கு மாநகராட்சி ஆணையருக்கு மனு கொடுத்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் மனு நிலுவையில் உள்ளது.

Advertisement

இந்த கொடிக் கம்பத்தால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த இடையூறும் ஏற்படாது என்பதை உறுதிமொழி கொடுத்தும், தொடர்ந்து கொடி கம்பம் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. எனவே அதிமுக கொடி கம்பம் அமைக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், “அதிமுக கொடி நடுவதற்கு அனுமதி கேட்கும் இடத்திற்கு அருகிலேயே திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளது. அதற்கு எந்த அனுமதியும் கிடையாது. ஆனால் எங்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது” என்று வாதிட்டப்பட்டது.

Advertisement

அதற்கு அரசு தரப்பில், “மனுதாரர் குறிப்பிடும் இடத்தில் யாருக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழ்நாடு காவல்துறை தலைவர் டிஜிபியை எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டதுடன், பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடி மரங்களையும் அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது? என கேள்வி எழுப்பினார்.

மேலும் தமிழகத்தில் கொடி மரங்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில், எத்தனை விபத்துகள் நடைபெற்றுள்ளது? இதுவரை எத்தனை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது? என்ற விவரத்தையும் தமிழ்நாடு காவல்துறை அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜனவரி 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version