சினிமா
‘மைக்கை பிடிங்கி அடிச்சுருவேன்’ நினைவிருக்கிறதா?- நிஜத்தில் நடத்திய மோகன் பாபு
‘மைக்கை பிடிங்கி அடிச்சுருவேன்’ நினைவிருக்கிறதா?- நிஜத்தில் நடத்திய மோகன் பாபு
மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் ஒரு பேட்டியின் போது, சற்று கோபமாக காணப்பட்டார். அந்த சமயத்தில் எடக்கு மடக்காக செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்க, சட்டடென்று உணர்ச்சிவசப்பட்ட விஜயகாந்த், ‘சொல்லிட்டே இருக்கே. கேக்கலனா மைக்கை புடுங்கி அடிச்சிடுவேனு’ கோபமாக சொன்னார்.
அப்போது, அவர் சொன்ன வார்த்தைகள் இணையத்தில் செம வைரலானது. விஜயகாந்தை கோபப்படுத்துவதே, இந்த செய்தியாளர்களுக்கு வேலையாக உள்ளது என்று பலரும் ஆதங்கப்பட்டனர்.
இந்த நிலையில், அன்று விஜயகாந்த் சொன்ன வார்த்தை இன்று நிஜத்திலேயே அரங்கேறியுள்ளது. இந்த வார்த்தையை நிஜத்தில் செய்து காட்டியவர் பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு.
நடிகர் மோகன் பாபுவுக்கு விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு என்கிற இரண்டு மகன்களும், லட்சுமி மஞ்சு என்ற மகளும் உள்ளனர்.
இவர்களும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளனர். நடிகர் மோகன்பாபு குடும்பத்துக்குள் கடந்த சில நாட்களாக சொத்து பிரச்சினை இருந்து வந்தது.
சில நாட்களுக்கு முன், சொத்து பிரச்சினை காரணமாக தனது மகன் மனோஜ் தன்னைத் தாக்கியதாக ஹைதராபாத் பனஹாகிரி ஷெரிப் காவல் நிலையத்தில் நடிகர் மோகன்பாபு புகார் அளித்தார்.
அந்த புகாரில், ” கடந்த சில மாதங்களுக்கு முன்னர், எனது மகன் மனோஜ் மஞ்சு மற்றும் மருமகள் மோனிகா இருவரும் அவர்களின் 7 மாத கைக்குழந்தையை பணிப்பெண்ணின் பராமரிப்பில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள்.
இதற்கிடையே, கடந்த 9ஆம் தேதி நான் எனது அலுவலகத்துக்கு சென்ற போது, ரங்காரெட்டி மாவட்டத்தின் ஜல்பல்லியில் உள்ள எனது வீட்டிற்குள் அடியாட்களுடன் நுழைந்துள்ளார்.
அங்கு பணியில் இருந்த ஆட்களை மிரட்டியுள்ளார். அந்த வீட்டை அவர்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். நான் அங்கு சென்றால் என்னை மிரட்டி, அந்த வீட்டை அவர்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ள திட்டம் தீட்டியுள்ளனர். எனது உயிருக்கு ஆபத்துள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.
பதிலுக்கு நடிகர் மனோஜ் 100-க்கு போன் செய்து தன்னையும் தனது மனைவியையும் மோகன்பாபு தாக்கியதாக புகார் தெரிவித்தார்.
இதனிடையே நேற்றிரவு (டிசம்பர் 10) நடிகர் மஞ்சு மனோஜ் தனது ஆதரவாளர்கள் மற்றும் செய்தியாளர்களை அழைத்துக் கொண்டு தனது தந்தை மோகன்பாபு வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு இரும்புக் கேட்டுக்கு வெளியே நின்றபடி கதவைத் திறக்கும்படி கத்தினார். உள்ளே, நடிகர் மோகன்பாபுவின் ஆதரவாளர்களும் இருந்தனர். ஒரு கட்டத்தில் கேட்டை தள்ளிக் கொண்டு நடிகர் மனோஜின் ஆதரவாளர்கள் உள்ளே சென்றனர்.
செய்தி சேகரிக்கும் ஆர்வத்தில் செய்தியாளர்களும் உள்ளே ஓடினார்கள். அப்போது, இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து செய்தியாளர்கள் மீது நடிகர் மோகன்பாபுவும் தாக்குதல் நடத்தினார்.
செய்தியாளர்கள் வைத்திருந்த மைக்கை பறித்து அவர்கள் தலையிலேயே ஓங்கியடித்தார். அடி வாங்கிய செய்தியாளர்கள் கதறியபடி அங்கிருந்து தப்பி ஓடினர்.
சண்டையில் நடிகர் மனோஜின் சட்டையும் கிழிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.
தொடர்ந்து, போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். நடிகர் மோகன்பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, எதிர்தரப்பினர் தன்னை தாக்கியதாக மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார் மோகன் பாபு.
செய்தியாளர்களை மோகன் பாபு தாக்கிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சவரனுக்கு ரூ.640 உயர்வு… ஒரே நாளில் உச்சம் தொட்டம் தங்கம் விலை!
சென்னையில் இன்று கனமழையா? – பிரதீப் ஜான் லேட்டஸ்ட் அப்டேட்!