இலங்கை
யாழில் பரவி வரும் மர்மக் காய்ச்சல் ; சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு!
யாழில் பரவி வரும் மர்மக் காய்ச்சல் ; சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மர்மக் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ள நிலையில், இது சுகாதார அதிகாரிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக‘எலிக்காய்ச்சல்’எனப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் நோயுடன் இது தொடர்புடையதா என்பதை கண்டறிவதற்கான பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொற்றாநோய் பிரிவின் மருத்துவர் குமுது வீரகோன் இந்த விடயத்தை தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நோயாளிகள் காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறுகளுடன் உள்ளனர். நோய்க்கான சரியான காரணத்தை உறுதிப்படுத்த சுகாதார அதிகாரிகள் குறிதத் நபர்களிடமிருந்து மாதிரிகளை சேகரித்து வருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை, லெப்டோஸ்பிரோசிஸ் இலங்கையில் தொடர்ந்தும் ஒரு முக்கிய சுகாதார பிரச்சினையாக உள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில், நாட்டில் 9ஆயிரத்துக்கும் மேற்பட்ட எலிக்காய்ச்சல் வழக்குகள் பதிவாகியுள்ளன, இதன் விளைவாக கிட்டத்தட்ட 200 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்த ஆண்டு பதிவாகிய வழக்குகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவானதை விட அதிகரித்துள்ளதாகவும் மருத்துவர் இதன்போது சுட்டிக்காட்டினார். (ச)