இந்தியா
வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழா; கேரளா செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழா; கேரளா செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம், சுதந்திரத்திற்கு முன்பாக ஆங்கிலேயர் ஆட்சியில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. அப்போது தாழ்த்தப்பட்ட மக்கள் வைக்கத்தில் இருந்த மகாதேவா சிவன் கோயில் வீதிகளில் நடக்கக்கூட தடை விதிக்கப்பட்டு தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டுவந்தது.
இதனை எதிர்த்து அங்கு போராட்டம் நடைபெற்றுவந்தது. மேலும், இந்தப் போராட்டத்திற்காக தமிழ்நாட்டில் இருந்து பெரியார் அழைக்கப்பட்டிருந்தார். அவர் வைக்கம் சென்ற பிறகு போராட்டம் தீவிரம் அடைந்து. இதனால், வைக்கத்தில் பெரியாருக்கு தடை விதிக்கப்பட்டு, அவர் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. மேலும், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். வைக்கத்தில் கோயில் சாலையில் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்க நடத்திய போராட்டத்தின் காரணமாக பெரியாருக்கு “வைக்கம் வீரர்” எனும் பெயரும் கொடுக்கப்பட்டது.
கேரளாவில் வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியாரின் பங்களிப்பை நினைவூட்டும் வகையில் அங்கு அவருக்கு ஏற்கனவே நினைவு சின்னம் அமைக்கப்பட்டு நினைவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதனை சீரமைத்துள்ள தமிழ்நாடு அரசு, நினைவகத்துடன், பெரியார் நூலகமும் அமைத்தது. மேலும், வரும் 12-ம் தேதி வைக்கம் நூற்றாண்டு விழா கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினமே தமிழ்நாடு அரசால், சீரமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவகம் மற்றும் புதிதாய் அமைக்கப்பட்டுள்ள பெரியார் நூலகம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா மாநிலம் வைக்கம் செல்கிறார்.
இந்த நிகழ்ச்சியில், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு மற்றும் கேரளா அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.