இந்தியா
Weather Update: வலுப்பெற்ற காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: 6 மாவட்டங்களில் மிரட்டப்போகும் மழை.. வானிலை ரிப்போர்ட்!
Weather Update: வலுப்பெற்ற காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: 6 மாவட்டங்களில் மிரட்டப்போகும் மழை.. வானிலை ரிப்போர்ட்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றதாகவும், இது இன்று மேற்கு – வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை – தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலிலும் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.
இதேபோல, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், நாளை திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், திருவள்ளூர் தொடங்கி நாகப்பட்டினம் வரை வட கடலோர மாவட்டங்களிலும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காற்றழுத்த தாழ்வுப்பகுதி மெதுவாக நகர்ந்து வருவதாக கூறினார்.
காற்றழுத்த தாழ்வுப்பகுதியால், தமிழ்நாட்டில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் மிதமான அளவிலேயே மழை இருக்கும் எனவும் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 14% அதிகம் எனவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.