இந்தியா
சாத்தனூர் அணை திறப்பு – 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சாத்தனூர் அணை திறப்பு – 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திருவண்ணாமலையில் பெய்த கனமழை காரணமாக, சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. தென் மாவட்டங்களில் நேற்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், மழை வெளுத்து வாங்கியது.
மேலும் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், சாத்தனூர் அணைக்கான நீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்ட சூழலில், கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த 5 மாவட்டத்திலுள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, திருநெல்வேலி மாவட்ட தாமிரபரணி அணைகளில் இருந்து நீர் திறக்கப்படுவதால், கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.