இலங்கை
பிரதமரை சந்தித்து கோரிக்க முன்வைத்த உதுமாலெப்பை எம்.பி!
பிரதமரை சந்தித்து கோரிக்க முன்வைத்த உதுமாலெப்பை எம்.பி!
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பைக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் தமிழ், ஆங்கிலம், உடற்கல்வி, ஆரம்பக்கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் இஸ்லாம் பாடங்களுக்கான பயிற்சி பெறும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க முடியும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்கு விண்ணப்பித்த அனைத்து பயிற்சி ஆசிரியர்களும் வெவ்வேறு ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளதால் பயிற்சி ஆசிரியர்கள் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றனர்.
அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் மேற்படி ஆசிரியர்களின் பயிற்சிகளுக்கான அனுமதியினை வழங்க வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள பொத்துவில் பிரதேசத்திற்கான புதிய கல்வி வலயம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் கல்வி அமைச்சினால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நிலையில், பொத்துவில் பிரதேசத்திற்கான புதிய கல்வி வலயத்திற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை. எனவே பொத்துவில் பிரதேசத்திற்கான புதிய கல்வி வலயத்தினை அமைப்பதற்கான அனுமதியினை வழங்க வேண்டும் என பிரதமரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.
மேற்படி விடயங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக பிரதமர் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.