உலகம்
400 பில்லியன் டொலர் சொத்து மதிப்பை எட்டிய எலான் மஸ்க்!
400 பில்லியன் டொலர் சொத்து மதிப்பை எட்டிய எலான் மஸ்க்!
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரும் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, உலக வரலாற்றில் 400 பில்லியன் டொலர் நிகர சொத்து மதிப்பை எட்டிய முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் உயர்ந்ததால், எலான் மஸ்க்கின் மதிப்பு அதிகளவில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மதிப்பீட்டின் படி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலகின் மிகவும் அதிக மதிப்புமிக்க நிறுவனம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. தற்போது 50 பில்லியன் டொலர்கள் அதிகரித்து 350 பில்லியன் டொலர் என்ற நிலையை எட்டியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை எலான் மஸ்க் 44 பில்லியன் டொலர்களுக்கு வாங்கினார்.
அதன்பின்னர் அமெரிக்க தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்புக்கு தனது ஆதரவைத் தெரிவித்து பிரசாரங்களிலும் கலந்து கொண்டார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், மஸ்க்கின் பங்குகள் பலமடங்கு உயர்ந்தது. கிட்டத்தட்ட 65 சதவீதம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்க அரசு செயல் திறன் துறை தலைவராகவும் எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார்.
அதன்பின்னர், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனப் பங்குகள் பலமடங்கு உயரத் தொடங்கியதும் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 447 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது.
எலான் மஸ்க்கின் நிறுவனங்கள் மற்றும் சொத்துமதிப்பு ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லாவுடன் நின்றுவிடவில்லை.
அவருக்கு செயற்கை நுண்ணறிவு நிறுவனமான எக்ஸ் ஏஐ, நியூராலிங் ஆகியவை உள்ளன. அவற்றின் மதிப்பு மே மாதத்தில் மட்டும் 2 மடங்கு உயர்ந்து 50 பில்லியன் டொலர்களை எட்டியிருக்கிறது.
மஸ்க்கின் நிறுவனங்கள் ஏஐ உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இது முதலீட்டார்கள் மத்தியில் அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
அதிகளவில் வருவாய் ஈட்டினாலும் எலான் மஸ்க் சில பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறார். இருந்தாலும், அவரது உலகப் பணக்காரர் என்ற அந்தஸ்தை ஒன்றும் செய்ய முடியாது.