இந்தியா
EVKS Elangovan: எம்எல்ஏ முதல் மத்திய அமைச்சர் வரை.. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அரசியலில் கடந்து வந்த பாதை!
EVKS Elangovan: எம்எல்ஏ முதல் மத்திய அமைச்சர் வரை.. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அரசியலில் கடந்து வந்த பாதை!
1948 ஆம் ஆண்டு, டிசம்பர் 21 ஆம் தேதி, ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிறந்தார் . பெரியாரின் அண்ணன் பேரன், அரசியலில் சொல்லின் செல்வர் ஈ.வி.கே.சம்பத் மற்றும் அதிமுக அமைப்பு செயலாளராக இருந்த சுலோசனாவின் மகன் என அரசியல் பின்புலத்துடனே இளங்கோவன் வளர்ந்தார். சென்னை மாநிலக் கல்லூரில் பி.ஏ.பொருளாதாரம் பயின்ற அவர், காங்கிரஸ் தொண்டர் என்பதை விட சிவாஜிகணேசனின் தீவிர ரசிகராக இருந்தார்.
இதன் பலனாக, சிவாஜி கணேசன் பரிந்துரையில், 1984 சட்டமன்றத் தேர்தலில், முதன் முறையாக காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியமங்கலத்தில் களம் காண ஈவிகேஎஸ்-க்கு வாய்ப்பு கிட்டியது. தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்த இளங்கோவன், காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்பதை தாண்டி, சிவாஜி கணேசனின் ஆதரவாளராகவே செயல்பட்டார்.
1987-ல் எம்ஜிஆர் மறைந்த போது, அவரது மனைவி ஜானகிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க மறுத்தது. இதனால், ஜானகிக்கு ஆதரவாக, சிவாஜி கணேசன் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேற, அவருடன் ஈவிகேஎஸ் இளங்கோவனும் காங்கிரஸை கை விட்டார். அதன் பிறகு, 1989 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், சிவாஜி கணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணி கட்சி சார்பில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியில் ஈவிகேஎஸ் போட்டியிட்டார். அந்த தேர்தலில், வெறும் 7 விழுக்காடு வாக்குகள் பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன், படுதோல்வியை சந்தித்தார். தேர்தல் தோல்வியை தொடர்ந்து, சிவாஜி கணேசன் தனது கட்சியை கலைத்த நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன், தாய் காட்சியான காங்கிரஸிலேயே மீண்டும் ஐக்கியமானார்.
அப்போதைய காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்திக்கு மிகவும் நெருக்கமானார்.
அதன்பிறகு, 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மீண்டும் தோல்வியே பரிசாக கிடைத்தது. அப்போது காங்கிரஸில் இருந்த மூத்த தலைவர்கள் பலர், வேறு கட்சிகளுக்கு சென்று விட்டதால், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவனை சோனியா காந்தி தேர்வு செய்தார். காங்கிரஸ் மாநிலத் தலைவராக சிறப்பாக செயல்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், தனது சர்ச்சைக்குரிய பேச்சு மற்றும் கூட்டணி வியூகத்தால் ஆக்டிவான அரசியல்வாதியாக அறியப்பட்டார்.
2001 சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் உடன் தமாக இணைந்ததால், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை மூப்பனாருக்கு ஈவிகேஎஸ் விட்டுக் கொடுத்தார். அதன்பிறகு, 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், கோபிச்செட்டிபாளையத்தில் களம் கண்ட இளங்கோவன் அபார வெற்றி பெற்று, மன்மோகன்சிங் அமைச்சரவையில் ஜவுளிதுறை இணை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். மத்திய இணை அமைச்சராக இருந்த போதிலும், காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்த திமுகவை, ஈவிகேஎஸ் இளங்கோவன் கடுமையாக விமர்சித்தார்.மேலும், திமுகவை விமர்சித்த, மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தை வீட்டிற்கே சென்று இனிப்பு கொடுத்து பாராட்டினார்.
அதன்பிறகு, 2009 மற்றும் 2014 மக்களவைத் தேர்தல்களில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தோல்வியே கிடைத்தது. இருப்பினும் அரசியல் களத்தில் ஆக்டிவாக இருந்த இளங்கோவன், தனது சர்ச்சைக்குரிய பேச்சுகளால் பெரிதும் கவனம் பெற்றார். அவரது விமர்சனக் கனைகளில் இருந்து தப்பாதே அரசியல்வாதிகளே இல்லை என்று கூட சொல்லலாம். குறிப்பாக, தமிழ்நாட்டின் இருபெரும் அரசியல் ஆளுமைகளான கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவை கடுமையான வார்த்தைகளால் ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்தார்.
இந்நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலில், தேனியில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனிடம் தோல்வி அடைந்தார். கடந்தாண்டு ஈவிகேஎஸ் இளங்கோவனின் மூத்த மகன், திருமகன் ஈவெரா நெஞ்சுவலியால் உயிரிழந்த நிலையில்,ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், திமுக ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட அவர், அபார வெற்றி பெற்று, சுமார் 39 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.
அரசியலில் படிப்படியாக முன்னேறிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒரு மாதத்திற்கு மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென நேற்று இரவில் இருந்து இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலமானார். அவரது குடும்பத்தினருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.