இந்தியா
அர்த்த மண்டபத்தில் இளையராஜா தடுத்து நிறுத்தம் : அறநிலையத் துறை விளக்கம்!
அர்த்த மண்டபத்தில் இளையராஜா தடுத்து நிறுத்தம் : அறநிலையத் துறை விளக்கம்!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்தில் இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்டது தொடர்பாக அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வெளியான “திவ்ய பாசுரம்” நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்றிரவு நடைபெற்றது.
அப்போது கோயிலில் உள்ள அர்த்தமண்டபத்திற்குள் செல்ல முயன்ற இசையமைப்பாளர் இளையராஜாவை ஜீயர்கள் மற்றும் பட்டர்கள் வெளியே நிற்குமாறு கூறியிருக்கின்றனர்.
அதன்படி, வெளியே நின்ற இளையராஜாவுக்கு மண்டப நுழைவாயிலில் வைத்து மரியாதை செய்தனர்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் தற்போது அறநிலைய துறை விளக்கம் அளித்துள்ளது.
அறநிலையத் துறை மதுரை இணை ஆணையர் செல்லத்துரை விருதுநகர் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள விளக்க கடிதத்தில்,
“விருதுநகர் மாவட்டம். ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம் மற்றும் நகர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயிலுக்கு 15.12.2024 அன்று இசையமைப்பாளர் இளையராஜா வருகை புரிந்ததன்பேரில், 16.12.2024 முதல் ஊடகங்களில் வரும் செய்தி குறித்து திருக்கோயில் செயல் அலுவலர் பார்வை 2-ன் மூலம் பின்வருமாறு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 46(6)- ன் கீழ் உள்ள திருக்கோயில் ஆகும்.
இத்திருக்கோயியானது முதல் நிலை செயல் அலுவலர் மற்றும் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட அறங்காவலர் குழு கூட்டுப் பொறுப்பில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.
15.12.2024 அன்று ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா சுவாமி தரிசனத்திற்கு திருக்கோயிலுக்கு வருகை புரிந்தனர்.
இத்திருக்கோயிலில் ஆண்டாள் ரெங்கமன்னார், கருடாழ்வார் மூலவர் கருவறையிலும், கருவறையினை அடுத்த அர்த்த மண்டத்தில் ஆண்டாள் ரெங்கமன்னார், கருடாழ்வார் உற்சவரும் எழுந்தருளியுள்ளனர்.
எனவே, இத்திருக்கோயில் மரபு படியும், பழக்க வழக்கபடியும் அர்த்த மண்டபம் வரை திருக்கோயிலின் அர்ச்சகர், பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை என்றும் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
15:12,2024 அன்று இசையமைப்பாளர் இளையராஜா ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் உடன் வருகை புரிந்த போது அவருடன் இணைந்து அர்த்த மண்டப வாசல் படி ஏறிய போது உடன் இருந்த ஜீயர் சுவாமிகள் மற்றும் திருக்கோயில் மணியம் அர்த்த மண்டபம் முன்பு இருந்து சாமி தரிசனம் செய்யலாம் என கூறிய உடன் அவரும், ஒப்புக் கொண்டு அர்த்த மண்டபத்தின் முன்பு இருந்து சுவாமி தரிசனம் செய்தார்.
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மட்டும் அர்த்த மண்டபத்தின் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா