இந்தியா
“சாதி என்கிற குறுகிய வட்டத்திற்குள்..” – தமிழ்நாட்டு மக்கள் குறித்து ராமதாஸ் வேதனை!
“சாதி என்கிற குறுகிய வட்டத்திற்குள்..” – தமிழ்நாட்டு மக்கள் குறித்து ராமதாஸ் வேதனை!
சென்னை தியாகராய நகரில் பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதிய “போர்கள் ஓய்வதில்லை” புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தாம் முதலில் ஒரு விவசாயி என்றும் இரண்டாவதாக மருத்துவர் என்றும் அதன் பின்னர்தான் அரசியல்வாதி எனக்கூறினார். ஓர் அரசியல்வாதி அனைத்தையும் கற்றறிந்திருக்க வேண்டும், அப்போதுதான் முடிவெடுக்க முடியும் எனக்கூறிய பாமக நிறுவனர் ராமதாஸ், அதிகாரிகள் அருகில் இருந்து ஆலோசனை கூறலாம் ஆனால் முடிவுகளை அரசியல்வாதிதான் எடுக்க வேண்டும் என்றார்.
மேலும், சாதி என்கிற குறுகிய வட்டத்திற்குள் தன்னை தமிழ்நாட்டு மக்கள் சுருக்கிவிட்டதாக வேதனை தெரிவித்த ராமதாஸ், “வன்னியர்கள் வாழும் ஊர் வழியாக பிணத்தை நான் எடுத்துச் சென்றேன். அது சாதியா?, தமிழ்நாட்டில் இரட்டை குவளை முறையை ஒழித்தது சாதியா?” எனவும் கேள்வி எழுப்பினார்.
அதேபோல், நல்ல கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகியவை நமக்கு தேவை என்பதை வலியுறுத்திய ராமதாஸ், “மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் தன்னிடம் வந்து என்ன வரம் வேண்டுமென கேட்டால், ஒரு சொட்டு மது இல்லாத தமிழ்நாடு, ஒரு சொட்டு நீர் கடலுக்குப் போகாத தமிழ்நாடு, எங்கும் கஞ்சா விற்காத தமிழ்நாடு வேண்டுமெனக் கேட்பேன்” என்று கூறியும் சுவாரஸ்யத்தைக் கூட்டினார்.
“ஒரே நாடு ஒரே தேர்தல்” சட்டம் போல, வாக்குக்குப் பணம் இல்லாத தேர்தல் என்கிற சட்டமும் கொண்டு வரவேண்டும் எனவும் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்தார்.