இந்தியா
நாக்கை இரண்டாக பிளந்து டாட்டூ குத்தும் வீடியோ வெளியீடு… திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்
நாக்கை இரண்டாக பிளந்து டாட்டூ குத்தும் வீடியோ வெளியீடு… திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்
திருச்சியில் பாதுகாப்பு உபகரணம் மற்றும் உரிய மருத்துவ பயிற்சி இன்றி வாடிக்கையாளருக்கு நாக்கை இரண்டாக பிளந்த டாட்டூ கலைஞர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்த ஹரிஹரன், டாட்டூ கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர், கடந்த ஜனவரி மாதம் தனது நாக்கை இரண்டு துண்டாக பிளந்து அறுவை சிகிச்சை செய்துக்கொண்டார். பின்னர், மும்பை சென்று 2 லட்சம் ரூபாய் செலவு செய்து தனது கண்ணில் பச்சை குத்திக்கொண்டார்.
மேலும், வித்தியாசமான முறையில் உடல் முழுவதும் பச்சை குத்திக்கொள்வதில் ஆர்வம் கொண்ட இவர், அதை ரீல்ஸ்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்தார். இந்த நிலையில், திருவெறும்பூர் கூத்தப்பாரைச் சேர்ந்த ஜெயராமன் என்பவருக்கு நாக்கை இரண்டாக பிளக்கும் அறுவை சிகிச்சையை எந்த மருத்துவ ஏற்பாடும் இன்றி ஆபத்தான முறையில் ஹரிஹரன் செய்துள்ளார்.
அதை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டவிட்ட நிலையில், ஹரிஹரனையும் ஜெயராமனையும் போலீசார் கைது செய்தனர். மருத்துவம் பயிலாமலே நாக்கில் அறுவை சிகிச்சை செய்தது சட்டவிரோதம் என்ற புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.