இந்தியா
மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் முயற்சி – பிரதமர் மோடி குற்றச்சாட்டு
மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் முயற்சி – பிரதமர் மோடி குற்றச்சாட்டு
அரசியல் சாசனம் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து மக்களவையில் ஒரு மணி நேரம் 50 நிமிடங்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, நாட்டின் வளமான எதிர்காலத்திற்காக 11 தீர்மானங்களை முன்மொழிந்துள்ளார்.
பிரதமர் மோடி ஆற்றிய நீண்ட உரையின்போது 11 தீர்மானங்களை முன்மொழிந்த அவர், அனைவரும் சட்டத்தை பின்பற்றி, கடமையைச் செய்ய வேண்டும் எனவும், ஊழலுக்கு எதிராக போராட வேண்டும் என்றும், வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மக்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி, மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அண்ணல் அம்பேத்கர் எதிர்ப்பு தெரிவித்ததாக குறிப்பிட்டார். ஆனால், அவரது சிந்தனைகளை பொருட்படுத்தாமல் இன்றளவும் வாக்கு வங்கி அரசியலுக்காக மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் முயற்சி செய்துவருவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மதவாத செயல்களால் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும், அதனை அமல்படுத்த முழு பலத்துடன் செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
ஓபிசிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்த மண்டல் அறிக்கையை காங்கிரஸ் அரசு குப்பைத் தொட்டியில் வீசியதாகவும் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுவரை சுதந்திர தினத்தின்போது நிகழ்த்திய உரைகளின் நேரத்தைவிட பிரதமர் மோடியின் இந்த உரை, அதிக நேரம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக கடந்த சுதந்திரத்தின் போது பிரதமர் மோடி 98 நிமிடங்கள் உரையாற்றினார்.