இந்தியா
3 நாட்கள் பயணமாக இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகா… பயணத் திட்டம் என்ன?
3 நாட்கள் பயணமாக இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகா… பயணத் திட்டம் என்ன?
இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட அனுரகுமார திசநாயகா அபார வெற்றி பெற்றார். அதிபராக அனுர குமார திசாநாயகா பதவியேற்றதை அடுத்து கடந்த அக்டோபர் மாதம் அவரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், இந்தியா வரும்படி அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், இலங்கை அதிபர் திசநாயகா மூன்று நாட்கள் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். அதிபராக பதவியேற்றபிறகு, முதலாவது வெளிநாட்டுப் பயணமாக வரும் அவர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்க உள்ளார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பிராந்திய அளவிலான விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
தொடர்ந்து மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து வலியுறுத்திய நிலையில், இலங்கை அதிபரிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, டெல்லியில் நடைபெற உள்ள தொழில்துறை சார்ந்த நிகழ்ச்சியிலும் புத்த கயாவுக்கும் இலங்கை அதிபர் செல்ல திட்டமிட்டுள்ளார்.