இந்தியா
Aadhav Arjuna: விஜயின் தவெக-வில் ஐக்கியமா? – அடுத்தகட்ட பிளான் குறித்து ஆதவ் அர்ஜுனா அளித்த பதில்!
Aadhav Arjuna: விஜயின் தவெக-வில் ஐக்கியமா? – அடுத்தகட்ட பிளான் குறித்து ஆதவ் அர்ஜுனா அளித்த பதில்!
விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “தலைவர் திருமாவளவன் வார்த்தைகளுக்கு நான் கட்டுப்படுபவன். அவரின் வாழ்த்துக்களையும் அன்பையும் அட்வைஸும் எடுத்துக் கொண்டு அவருடன் பயணிப்பேன். அண்ணனின் விமர்சனத்தை எனக்கான அறிவுரையாக பார்க்கிறேன். கள அரசியல்களை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். எனக்கு அவர் எப்போதும் ஆசான். கொள்கை சார்ந்த அரசியலில் அவருடன் எப்போதும் எனது பயணம் இருக்கும்” என்றார்.
அப்போது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கொடுப்பதில் தமிழக அரசு பாரபட்சம் காட்டுகிறது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் கூறியதை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஆதவ் அர்ஜுனா, “இன்னும் கொஞ்சம் நாளில் அவரையும் சங்கி என சொல்லிவிடுவார்கள்” என்றவர், “வேல்முருகன் கருத்தில் நான் உடன்படுகிறேன்.” எனக் கூறினார்.
திமுக தொடர்பான கேள்விக்கு, “குறைந்தபட்சம் செயல்திட்டத்தை உருவாக்கி எதிர்காலத்தில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை வைத்து கொள்கை தலைவர்கள் புதிய அரசியலை உருவாக்க வேண்டும் என்பது எனது குறிக்கோளாக இருந்தது. அதை பேசியதற்கு எனக்கு பனிஷ்மென்ட் கிடைத்தது. இந்தக் கொள்கையை எனது பயண பிரச்சாரத்தில் உருவாக்குவேன்.” எனக் கூறினார்.
ஆதவ் அர்ஜுனாவிடம் தவெகவில் இணைய உள்ளீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “இன்றைக்கு எந்த கட்சியில் இணைய வேண்டும் என்பதை விட, என்ன செய்ய வேண்டும் என்பதை தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். எதிர்கால பயணம் குறித்து கூடிய விரைவில் செய்தியாளர்களை சந்தித்து கண்டிப்பாக சொல்கிறேன். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் என்னுடன் பயணித்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
மேலும் பேசுகையில், “சாம்சங் தொழிலாளர்கள் உடன் இணைந்து போராடினால் நக்சலைட் என்பார்கள். மழை வெள்ளத்தில் மக்களுக்கு சாப்பாடு கிடைக்கவில்லை என்றால் சங்கி என சொல்வார்கள். என் மீது ஏற்படும் சந்தேகங்களுக்கு என் பயணத்தின் மூலம் தான் பதில் சொல்லப்படும்.
பெரியார், அம்பேத்கர் மீது பல சந்தேகங்கள் எழுப்பப்படும் போது, தங்கள் வாழ்க்கை பயணத்தில் மூலம் தான் அவர்கள் பதில் சொன்னார்கள். விமர்சனம் செய்பவர்களுக்கு பதிலாக நம்முடைய பயணத்தின் மூலம் பெரியார், அம்பேத்கர் கருத்துக்களையும், அண்ணா அவர்களின் தேர்தல் அரசியலையும் கொண்டு ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கும்போது மக்களின் நம்பிக்கை முழுவதமாக எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன்.” என்றும் ஆதவ் அர்ஜுனா பேசினார்.