இந்தியா
ஐ.டி. ஊழியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்… மனைவி, மாமியார் உள்பட 3 பேர் அரியானாவில் கைது…
ஐ.டி. ஊழியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்… மனைவி, மாமியார் உள்பட 3 பேர் அரியானாவில் கைது…
பெங்களூருவை சேர்ந்த ஐ.டி. ஊழியர் அதுல் சுபாஷ் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது மனைவி, மாமியார் மற்றும் மைத்துனர் ஆகியோர் அரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான அதுல் சுபாஷ் என்ற ஐடி ஊழியர் கடந்த திங்கள் கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் சோதனை நடத்திய போது சுபாஷ் தற்கொலையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன.
போலீசார் ஆய்வில் 24 பக்க தற்கொலை கடிதம் மற்றும் 90 நிமிடங்கள் வீடியோ பதிவு உள்ளிட்டவை கிடைத்தன. அந்த பதிவில், தன் மீதும் தனது குடும்பத்தினர் மீது தனது மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டு அலைக்கழித்த சம்பவத்தை அதுல் சுபாஷ் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும் மனைவி மற்றும் மகனுக்குப் பராமரிப்பு தொகையாக மாதம் தோறும் 2 லட்சம் ரூபாய் வழங்கவேண்டும் என்று தன்னை அவர்கள் வற்புறுத்துவதாகவும் அதில் தெரிவித்திருந்தார்.
மேலும் உத்தர பிரதேச ஜான்பூர் நீதிமன்ற நீதிபதி, தன் மீதான வழக்குகளைத் தீர்த்து வைக்க 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதாகவும் அதில் குற்றம்சாட்டியிருந்தார். அதைவிட ஆச்சரியம் என்னவென்றால், சுபாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்வதற்கு முன் பலமாதங்களாகத் திட்டமிட்ட தகவல்களும் போலீசாருக்கு கிடைத்தன.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இறப்பதற்கு முந்தைய தினம், இறக்கும் தினம், இறப்பதற்கு சற்று முன் என மூன்று காலங்களாக பிரித்துத் தான் செய்ய வேண்டிய அனைத்து விஷயங்களையும் அட்டவணையாகப் பட்டியல் போட்டு அதை வீட்டின் சுவர் மீது மாட்டி வைத்திருந்தார்.
அந்த அட்டவணையில் தனது செல்போனில் உள்ள கைரேகை மற்றும் முக அடையாள பதிவு ஆகியவற்றை அகற்றுவது, கார், பைக் மற்றும் ரூம் சாவிகளை பத்திரமாக எடுத்து வைப்பது. கம்பெனி லேப்டாப் மற்றும் சார்ஜரை ஒப்படைப்பது என அடுத்தடுத்த வேலைகளை முடித்ததன் அடையாளமாக டிக் செய்யப்பட்டிருந்தன.
அதுல் சுபாஷ் உயிரிழந்த சம்பவம் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களான அவரது மனைவி, மாமியார் உள்ளிட்டோர் தலைமறைவாகியிருந்த நிலையில், அவர்களை பெங்களூரு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் அதுல் சுபாஷின் மனைவி நிகிதா, மாமியார் நிஷா மற்றும் மைத்துனர் அனுராக் ஆகியோரை பெங்களூரு போலீசார் அரியானாவில் கைது செய்துள்ளனர். இதையடுத்து பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.