இந்தியா
மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி?: டிடிவி தினகரன், அண்ணாமலை பேட்டி!
மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி?: டிடிவி தினகரன், அண்ணாமலை பேட்டி!
அதிமுகவைச் சேர்ந்தவர்கள் பாஜக கூட்டணியை விரும்புகிறார்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அண்மையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டெல்லி சென்றுவந்தார்.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 17) அமமுக மதுரை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், “அதிமுக பலமாக இருப்பதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது. திமுவை வீழ்த்த வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றுதான் பாஜகவினர் நினைக்கிறார்களே தவிர அதிமுக என்ற கட்சி அழிந்து விடும் என நினைக்கவில்லை.
அண்ணாமலை உட்பட மாநில தலைவர்களும் சரி, தேசிய தலைவர்களும் சரி அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். அதுதான் நல்லது என்றுதான் கூறுகிறார்கள்.
அதிமுகவை பொறுத்தவரை மாவட்ட வாரியாக கூட்டங்களில் பிரச்னை நடந்து வருகிறது.எடப்பாடி ஆட்சியில் இருந்ததால் அமைதியாக இருந்தனர் தவிர, தொண்டர்கள் தற்போது வருத்தத்தில் உள்ளார்கள்.
எனவே எடப்பாடி டூர் போகும்போது,போலீஸ் பாதுகாப்புடன் செல்ல வேண்டிய சூழ்நிலை வரும் . பழனிசாமி பொதுச்செயலாளராக பணபலத்துடன் உள்ளதால் வணிக நிறுவனம் போல் அதிமுகவை நடத்தி வருகிறார். அவர் திருந்தவில்லை என்றால் 2026 தேர்தலுக்கு பிறகு அதிமுகவுக்கு எடப்பாடி மூடுவிழா நடத்திவிடுவார்” என்றார்.
இரட்டை இலை அவருக்கு கொடுக்கப்பட்டதே இன்னும் கேள்வி குறியாகத்தான் இருக்கிறது. அதை எதிர்த்து வழக்குகள் இருக்கின்றன என்று குறிப்பிட்ட டிடிவி தினகரன், “பாஜக கூட்டணியில் அதிமுக வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது. அதில் பழனிசாமி இருப்பாரா, இருக்க மாட்டாரா என்று நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அதிமுக முன்னாள் இன்னாள் நிர்வாகள் பாஜக கூட்டணியை விரும்புகிறார்கள். நண்பர்கள் மூலமாக சொல்கிறார்கள். அதிமுக அழியாமல் இருக்க வேண்டுமானால் உறுதியாக தேசிய ஜனநாயக கூட்டணி உடன் வந்தால்தான் முடியும். அதுதான் எதார்த்தம். திமுகவை எதிர்த்து எந்தக் கட்சி வந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்கும்” என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளார்கள் சந்திப்பின் போது பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், “டிடிவி தினகரன் அவருடைய கருத்தை சொல்லியிருக்கிறார். எங்கள் கூட்டணியில் டிடிவி தினகரன் ஒரு முக்கியமான மற்றும் வலிமையான தலைவர்.
அவர் எதற்காக அந்த இயக்கத்தை நடத்துகிறார் என்று எல்லோருக்கும் தெரியும். அண்ணன் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை பற்றி பேசுங்கள் என்றால் பொதுக்குழுவில் பாஜகவை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்.
பாஜக வாக்கு சதவிகிதம் என்ன என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார். எந்தளவுக்கு பாஜக வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை எடப்பாடி பழனிசாமியின் பேச்சு காட்டுகிறது.
நாங்கள் எங்களுடைய கட்சியை பற்றிதான் பேசுகிறோம். டிடிவி தினகரன் அவருடைய கருத்தை பேசியிருக்கிறார். அவருடைய பேச்சு அதிமுகவின் இன்றைய நிலைமையை பிரதிபலிக்கிறது” என்று கூறினார்.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார், உங்களுடைய நிலைப்பாடு என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, “தமிழ்நாட்டின் அரசியல் களம் மாறியிருக்கிறது. நம்மிடம் வலிமையான கூட்டணி இருக்கிறது.
எல்லாரும் இணக்கமாக இருக்கிறோம். 2024 தேர்தலில் மக்கள் மும்முனை போட்டியை பார்த்திருக்கிறார்கள். 2026ல் பொறுத்திருந்து பார்ப்போம். தேசிய தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தேசியளவில் சிந்தனை இருக்கும்.
நேரமும் காலமும் ரொம்ப தூரம் இருக்கிறது. நான் இப்போது கூட எடப்பாடி அண்ணன் பற்றி என்ன சொல்கிறேன் என்றால், ‘அண்ணன் அவர் மேடையில் அவர் கட்சியை பற்றி பேசும் போது கூட பாஜகவைப் பற்றி பேசுகிறாரே… 2019 தேர்தல் அப்படி, 2024 தேர்தல் அப்படி’ என்று சொல்கிறார். இதைத்தான் சொல்கிறேன்.
பாஜக தெளிவாக இருக்கிறது. தமிழகத்தில் திமுக ஒழிக்கப்பட வேண்டும். அப்படியானால் எல்லாம் ஒன்றாக சேர்ந்தால்தான் ஒழிக்க முடியுமா? இல்லை கூட்டணியை வலிமைப்படுத்தினால் ஒழிக்க முடியுமா? எல்லாமே சாத்தியம்தான்… நாங்கள் எங்கள் கட்சியை வளர்க்கிறோம். ஆளும் கட்சியை எதிர்த்து பேசுகிறோம்” என்று பதிலளித்தார்.
முன்னதாக அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பேசி வந்தார். இந்தநிலையில் இன்றைய பேட்டியில் அண்ணன் எடப்பாடி பழனிசாமி என்று சாஃப்ட் கார்னராக அண்ணாமலை பேசியிருப்பது அரசியல் அரங்கில் பேசு பொருளாகியிருக்கிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் – அரசியலமைப்பு மீதான தாக்குதல் : ஆ.ராசா