இந்தியா
ரயில் பயணம் முதல் ஒபாமா அழைப்பு வரை.. தபேலா மன்னன் ஜாகிர் உசேனின் இசை பயணம்
ரயில் பயணம் முதல் ஒபாமா அழைப்பு வரை.. தபேலா மன்னன் ஜாகிர் உசேனின் இசை பயணம்
தபேலா உலகின் மன்னன் என்று அழைக்கப்படும் இந்தியாவைச் சேர்ந்த ஜாகிர் உசேன், உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு, திரையுலகில் மட்டுமல்லாது, பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
1996-ஆம் ஆண்டில் வெளியான “இந்தியன்” படம் படத்தில் இடம்பெற்ற பாடலின் வரிகள், தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேனின் சாதனைகளை பறைசாற்றுகின்றன.
மும்பையில் தபேலா இசைக்கலைஞர் அல்லா ராக்காவுக்கு 1951-ஆம் ஆண்டு மூத்த மகனாகப் பிறந்தவர் ஜாகிர் உசேன். 3 வயது முதலே தனது தந்தையிடமிருந்து மிருதங்க இசையைக் கற்றுக் கொண்டார். 12-ஆவது வயதிலேயே கச்சேரிகளில் தபேலா வாசிக்கும் அளவுக்கு திறனைப் பெற்றார். எனினும், இளம் வயதில் அவரது குடும்பம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்தது. இதனால், ரயில்களில் இடம் கிடைக்காமல் பெட்டிகளின் தரையில் அமர்ந்து பயணம் மேற்கொண்டுள்ளார்.
1970-ஆம் ஆண்டில் இசை நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றார். அதன்பின்னர், ஆண்டுக்கு 150 இசை நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்தியுள்ளார்.
பிரபல பாப் இசைக்குழுவான “தி பீட்டில்ஸ்” உடன் இணைந்து இசைக் கச்சேரிகளில் கலந்துகொண்டார். பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் உள்ளிட்ட உலகின் பல்வேறு கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 66-ஆவது கிராமி விருது வழங்கும் விழாவில், ஒரே இரவில் மூன்று விருதுகளைப் பெற்றார் ஜாகிர் உசேன். இதன்மூலம், ஒரே விழாவில் மூன்று கிராமி விருதுகளைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
சங்கர் மகாதேவனுடன் இணைந்து செயல்பட்ட “சக்தி” குழுவின் “திஸ் மூமன்ட்” என்ற ஆல்பத்துக்கு “உலகளாவிய சிறந்த இசை ஆல்பம்” என்ற விருதைப் பெற்றது. ஒட்டுமொத்தமாக 4 கிராமி விருதுகளை ஜாகிர் உசேன் பெற்றுள்ளார்.
60 ஆண்டுகால இசை வாழ்க்கையில் பல்வேறு பிரபலமான சர்வதேச மற்றும் இந்தியக் கலைஞர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளார். 1973-இல் பிரிட்டன் கிதார் கலைஞர் ஜான் மெக்லாலின், தமிழ்நாட்டைச் சேர்ந்த வயலின் கலைஞர் சுப்பிரமணியன் லட்சுமிநாராயணா, மத்தள இசைக் கலைஞர் விக்கு விநாயக்ராம் ஆகியோருடன் இணைந்து இந்திய பாரம்பரிய கலையையும், ஜாஸ் இசைக்கலையையும் ஒன்றிணைத்தார்.
வெள்ளை மாளிகையில் 2016-ல் பிரபல இசைக்கலைஞர்களைக் கொண்டு நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் அதிபர் ஒபாமாவின் அழைப்பின்பேரில் கலந்துகொண்டார்.
ஜாகிர் உசேனை பெருமைப்படுத்தும் வகையில், 1988-இல் பத்மஸ்ரீ, 2002-இல் பத்ம பூஷண், 2023-இல் பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்தது.
“தந்துவிட்டேன் என்னை” என்ற தமிழ் திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார்.
தபேலா இசையுலகில் மன்னனாக போற்றப்படும் ஜாகிர் உசேன், நுரையீரல் பாதிப்பால் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், 73 வயதான அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது இறப்பு உலக அளவில் இசை உலகுக்கு பேரிழப்பாக உள்ளது. எனினும், அவரது இசைப்படைப்புகள் என்றென்றைக்கும் அவரது பெயரை ஒலித்துக் கொண்டேயிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.