இந்தியா

அம்பேத்கர் குறித்து அமித் ஷா சர்ச்சைப் பேச்சு : முடங்கியது நாடாளுமன்றம்!

Published

on

அம்பேத்கர் குறித்து அமித் ஷா சர்ச்சைப் பேச்சு : முடங்கியது நாடாளுமன்றம்!

அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் இன்று (டிசம்பர் 18) அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

இதற்கிடையே அவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா எதிர்க்கட்சி எம்.பிக்களை நோக்கி, “’அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்” என விமர்சித்தார்.

நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு சட்டம் மீதான விவாதம் நடைபெற்று வரும் வேளையில், அமித் ஷாவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில், “மனுதர்மத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு அம்பேத்கர் பிரச்னையாகத்தான் தெரிவார்” என தெரிவித்திருந்தார். தொடர்ந்து பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடியதும் ’அம்பேத்கரை அவமதித்து பேசியதற்காக அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்’ என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர்.

குறிப்பாக அம்பேத்கர் புகைப்படத்தை கையில் ஏந்தி, ‘அம்பேத்கர், ஜெய்பீம்’ என்றும், ’அம்பேத்கரை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது’ என கோஷம் எழுப்பினர்.

அப்போது அவையில் பேசிய மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், “காங்கிரஸ் கட்சி எப்போதும் அம்பேத்கரை அவமதிப்பதாகவும், லோக்சபா தேர்தலில் அவரது தோல்வியை உறுதி செய்வதாகவும் குற்றஞ்சாட்டினார்.

Advertisement

இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் அமளியால், கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

அம்பேத்கரின் புகைப்படத்துடன் நடாளுமன்ற வளாகத்திற்கு வந்த திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள், அமித் ஷா மன்னிப்பு கேட்கவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version