இந்தியா

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் : மேலும் ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு!

Published

on

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் : மேலும் ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு!

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு மேலும் ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் இன்று (டிசம்பர் 18) வெளியிட்டுள்ள அறிக்கையில், “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் 2024 25 ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு ரூ.3,50,000/- வீதம் மொத்தம் ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கிராமப்புற பகுதிகளில் வறத்தாழ 8 இலட்சம் குடிசை வீடுகள் உள்ளதாக ”அனைவருக்கும் வீடு” என்ற கணக்கெடுப்பின் வழியாக கண்டறியப்பட்டதன் அடிப்படையில் ”குடிசையில்லா தமிழ்நாடு” என்ற இலக்கினை அடையும் பொருட்டு, எதிர்வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் ஊரக பகுதிகளில் 6 வருடங்களில் 8 இலட்சம் வீடுகள் புதியதாக கட்டித்தர அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Advertisement

அதன்படி நடப்பு நிதியாண்டில் (2024-25) ஒரு இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டின் பரப்பளவு சமையலறை உட்பட 360 சதுர அடியாகும்.

பயனாளிகளின் நிதிச்சுமையை குறைக்கும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ் TANCEM சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகள் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்டு, துறை மூலம் வழங்கப்படுகிறது.

வீட்டின் கட்டுமானத்திற்கு ஏற்ப தரைமட்ட நிலை. ஜன்னல் மட்ட நிலை. கூரை வேயப்பட்ட நிலை மற்றும் பணிமுடிவுற்ற பின் என நான்கு தவணைகளில் (Single Nodal Account SNA) தொகை நேரடியாக பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இதுவரை தமிழ்நாடு அரசால் ரூ.1051.34 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு பயனாளிகளுக்கு வீட்டின் கட்டுமான நிலைக்கு ஏற்ப ரூ.860.31 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், துறை மூலம் வழங்கப்படும் சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகளுக்கு (Steel) என ரூ.135.30 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் ரூ.995.61 கோடி இதுவரை கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் வீடுகளும் விரைவாக கட்டப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, வீடுகளின் கட்டுமான பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு அரசு மேலும் ரூ.400 கோடி விடுவித்து ஆணை வழங்கியுள்ளது.

தற்போது வரப்பெற்றுள்ள ரூ.400 கோடியும் சேர்ந்து மொத்தம் ரூ.1451.34 கோடி பெறப்பட்டு கட்டுமான நிலைக்கு ஏற்ப பயனாளிகளின் வங்கிகணக்கிற்கு நேரடியாக தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இந்நிதியாண்டிற்குள் அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு தமிழ்நாடு அரசால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version