இந்தியா
800 பேரின் உயிரை காப்பாற்றிய ரயில் நிலைய பொறுப்பாளருக்கு உயரிய விருது.. வெளியான அறிவிப்பு
800 பேரின் உயிரை காப்பாற்றிய ரயில் நிலைய பொறுப்பாளருக்கு உயரிய விருது.. வெளியான அறிவிப்பு
கடந்த ஆண்டு டிசம்பர் மாத பெரு வெள்ளத்தில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி கொண்ட 800 பயணிகளுக்கு, அந்த 3 நாட்கள் வாழ்வின் மறக்கமுடியாத அனுபவங்கள் என்றே கூற வேண்டும். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி அதிகனமழை கொட்டிக்கொண்டிருந்தது.
சரியாக அன்று இரவு 8.25 மணிக்கு, சென்னை எழும்பூர் நோக்கி 20606 என்ற எண் கொண்ட செந்தூர் விரைவு ரயில் தன் பயணத்தை தொடங்கியது. வானத்தை பிய்த்துக்கொண்டு மழை கொட்ட, ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் வரை சென்ற செந்தூர் விரைவு ரயில், வெள்ளத்துக்கு நடுவே திடீரென நிறுத்தப்பட்டது. தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால் ரயில் நிறுத்தப்பட்டிருக்கலாம் என்று முதலில் பயணிகள் எண்ணியிருந்தனர்.
மதுரை ரயில்வே கோட்டம் அறிக்கை வெளியிட்ட பிறகு தான், சில மீட்டர் தூர இடைவெளியில் உயிர் தப்பி உள்ளோம் என்று பயணிகளுக்கு தெரியவந்தது. மழை வெள்ளத்தில் ஸ்ரீ வைகுண்டம் – செய்துங்கநல்லூர் இடையே சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதையில் சரளை கற்கள் வெள்ள நீரால் அடித்து செல்லப்பட்டிருந்தன. இதை வழக்கமான சோதனை பணியின்போது, ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலைய பொறுப்பாளரான ஜாபர் அலி கண்டறிந்து, உடனடியாக ரயிலை நிறுத்தி சுமார் 800 பேரின் உயிரை காப்பாற்றியிருந்தார்.
அதன்பின்னர் 3 நாட்கள் வெள்ளம் சூழ்ந்த ரயிலுக்கு நடுவே தவித்துக் கொண்டிருந்த பயணிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், கடும் வெள்ளத்தை கடந்து, நியூஸ் 18 தமிழ்நாடு குழு, முதல் ஆளாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தை அடைந்து செய்தி வெளியிட்டது. மீட்புப் பணிக்கும் பெரும் பங்காற்றியது.
இந்த நிலையில், பெரும் விபத்தை தடுத்து நிறுத்திய ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலைய பொறுப்பாளர் ஜாபர் அலிக்கு ரயில்வேயின் மிக உயரிய விருதான அதி விசிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்களின் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறையில் பணியாற்றும் 100 பணியாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஜாபர் அலிக்கு வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள 70வது ரயில்வே வார விழாவில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விருது வழங்க உள்ளார்.