இந்தியா

ஈரோட்டில் ஸ்டாலின்: இடைத் தேர்தல் பற்றி முக்கிய முடிவு!

Published

on

ஈரோட்டில் ஸ்டாலின்: இடைத் தேர்தல் பற்றி முக்கிய முடிவு!

இரண்டு நாள் பயணமாக இன்று (டிசம்பர் 19) ஈரோட்டுக்குச் சென்றிருக்கிறார் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின்.

இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை சென்ற ஸ்டாலின், அங்கிருந்து  சாலை மார்க்கமாக ஈரோட்டுக்கு பயணமாகிறார்.

Advertisement

ஈரோட்டில் இன்றும் நாளையும் கட்சி, அரசு நிகழ்வுகளில் பங்கேற்கிறார். இன்று மாலை திமுகவின் ஈரோடு மாவட்ட நிர்வாகிகளையும் சந்திக்கிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த 14 ஆம் தேதி காலமான நிலையில், அதன் பின் முதன் முறையாக ஈரோடு வருகிறார் முதல்வர் ஸ்டாலின். ஏற்கனவே  ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியாக இருக்கிறது என சட்டமன்ற செயலகம் தேர்தல் ஆணையத்துக்கு நிர்வாக ரீதியாக தகவல் அளித்துள்ள நிலையில், அத்தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிறது.

இந்நிலையில் இன்று ஈரோட்டுக்கு வந்து திமுக மாவட்ட நிர்வாகிகளை சந்திக்க இருக்கும் ஸ்டாலினிடம், அக்கட்சி நிர்வாகிகள் குறிப்பாக இளைஞரணியினர், ‘ஈரோடு கிழக்கில் திமுகவே போட்டியிடலாம் என்று வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாக’  தகவல்கள் வருகின்றன.

Advertisement

இதுகுறித்து ஈரோடு மாவட்ட திமுகவினரிடம் பேசினோம்.

“ஈவிகேஸ் இளங்கோவன் கடந்த 2023 இடைத் தேர்தலில் வேட்பாளராக நின்றபோது ஈரோடு மாவட்ட திமுகவினர் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் அவருக்காக கடுமையாக இடைத் தேர்தல் பணியாற்றினோம்.  

அவர் இவ்வளவு சீக்கிரம் காலமாவார், மீண்டும் ஓர் இடைத் தேர்தல் வந்துவிடும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் இடைத் தேர்தலின்போதே, ‘எனக்கு உடம்பு சரியில்லை. எனக்கு பதிலாக ரெண்டாவது பையன் சஞ்சய் சம்பத்துக்கு கொடுங்களேன்’ என்றுதான் இளங்கோவன் திமுகவிடமும் காங்கிரசிடமும் கோரிக்கை வைத்தார்.

Advertisement

ஆனால் அப்போது, ‘சஞ்சய்க்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. நீங்க சட்டமன்றத்துக்கு வரணும்’ என்று அவரை வற்புறுத்தித்தான்  நிற்க வைத்தோம். இப்போது  இளங்கோவனும் காலமாகிவிட்டார்.

மீண்டும் அவரது குடும்பத்தில் இருந்தே ஒருவரை வேட்பாளர் ஆக்குவதில் சென்டிமென்ட் ஆக விருப்பமில்லை என்று காங்கிரஸார் சொல்லி வருகிறார்கள். மேலும் ஈரோடு மாவட்ட  காங்கிரஸில் இருந்து இளங்கோவன் இடத்தை நிரப்பும் அளவுக்கு ஆளுமை கொண்ட வேட்பாளர் கிடைப்பாரா என்பதும் விவாதத்துக்குரிய கேள்விதான். இதற்கிடையில் இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத், சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தனது தந்தைக்கு அரசு மரியாதை அளித்தமைக்காக நன்றி தெரிவித்துள்ளார். அப்போது அவர்கள் சில விஷயங்களையும் பேசியிருக்கிறார்கள்.

தலைவர் ஸ்டாலின், தேர்தல் நெருங்கும் வேளையில் திமுக கூட்டணியில் எந்த சலசலப்பும் இருக்கக் கூடாது என்று நினைக்கிறார். அதனால் காங்கிரஸுக்கு 2021 இல் ஒதுக்கிய இந்த சீட் மீண்டும் காங்கிரசுக்கேதான் ஒதுக்கப்பட வேண்டும் என்று நினைப்பதாக எங்கள் மாவட்டச் செயலாளர் முத்துசாமி கூறி வருகிறார்.

Advertisement

ஆனால்… திமுகவே ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் பலர் கருதுகிறார்கள். ஏற்கனவே துணை முதல்வர் உதயநிதிக்கு இதுகுறித்து கோரிக்கைகள் போயிருக்கின்றன. சில வேட்பாளார்கள் பெயர் கூட உதயநிதிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

மாவட்ட துணைச் செயலாளர் செல்லப்பொன்னி மனோகரன் (இவர் 2011 மேயர் தேர்தலில்  போட்டியிட்டவர்) தலைமைச் செயற்குழு உறுப்பினர் குமாரசாமி, இன்னொரு மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், தேமுதிகவில் இருந்து திமுகவில் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரகுமார் உள்ளிட்டோரும்  திமுகவினரின் வேட்பாளர் என விவாதிக்கப்படுகிறார்கள். திமுக போட்டியிடும் பட்சத்தில் கவுண்டர் சமுதாய வேட்பாளரா, முதலியார் சமுதாய வேட்பாளரா என்ற கேள்வியும் முக்கியத்துவம் பெறும்.

இதற்கிடையே காங்கிரஸின் முழு சம்மதத்தோடு திமுகவே ஈரோடு கிழக்கில் நிற்க வேண்டும் என இன்று நாங்கள் முதல்வரிடம் கோரிக்கை வைக்க இருக்கிறோம். இதுதான் 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு நல்லதாக இருக்கும்” என்கிறார்கள்.

Advertisement

இந்த சூழலில் இன்று ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் கட்சியினரை சந்தித்து பேசியபிறகு  திமுக போட்டியிடுகிறதா, காங்கிரஸே போட்டியிடுகிறதா என்பதில் ஒரு தெளிவு கிடைத்துவிடும்!

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version