இந்தியா

’கழிவுகள் கொட்டப்படுவதை எதிர்க்கக் கூட தெம்பில்லை’ : ஸ்டாலினை விமர்சித்த எடப்பாடி

Published

on

’கழிவுகள் கொட்டப்படுவதை எதிர்க்கக் கூட தெம்பில்லை’ : ஸ்டாலினை விமர்சித்த எடப்பாடி

கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து தமிழகத்தில் கொட்டப்பட்ட நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இருந்து திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் லாரி லாரியாக இறைச்சி கழிவுகள், மருத்துவக் கழிவுகளை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து கொட்டுகின்றனர்.

Advertisement

திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அருகே நடுக்கல்லூர், பழவூர் பகுதியில் கடந்த 17ஆம் தேதி அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு உள்ளன.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரித்து இருந்தார்.

இதுதொடர்பாக தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை அகற்றும் செலவினை கேரள மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் வசூலியுங்கள் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

இந்த நிலையில், தமிழ்நாடு யாருடைய குப்பைத் தொட்டியும் அல்ல என்று கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து கொட்டப்பட்டு வரும் நிலையில், தற்போது திருநெல்வேலி மாவட்டத்தின் கல்லூர், பழவூர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்பட்டிருப்பதற்கு எனது கடும் கண்டனம்.

கேரள முதல்வருடன் கைகுலுக்கி போட்டோஷூட் எடுப்பதில் மட்டும் முனைப்பாக இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு, முல்லைப் பெரியாற்றில் மாநில உரிமைகளை நிலை நாட்ட தான் திராணியில்லை என்று பார்த்தால், அண்டை மாநிலத்தின் கழிவுகள் நம் மாநிலத்தில் கொட்டப்படுவதை எதிர்க்கக் கூட தெம்பில்லாத முதல்வராக இருக்கிறார்.

Advertisement

வளமிகு தமிழ்நாடு, யாருடைய குப்பைத் தொட்டியும் அல்ல! கொட்டப்பட்டு இருக்கக்கூடிய மருத்துவ கழிவுகளால் மக்களுக்கு பல்வேறு தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளதால் அனைத்து குப்பைகளும் உடனே அகற்றப்பட வேண்டும்.

இனி இதுபோன்று பிற மாநில கழிவுகள் கொட்டப்படாத அளவிற்கு திடமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என எடப்படி தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version