இந்தியா
இரட்டை இலை சின்ன விவகாரம்; கூடுதல் அவகாசத்திற்கு நீதிமன்றம் மறுப்பு
இரட்டை இலை சின்ன விவகாரம்; கூடுதல் அவகாசத்திற்கு நீதிமன்றம் மறுப்பு
அதிமுக தொடர்பாக, தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அக்கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது.
இதனை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரின் கருத்துக்களை கேட்டு, நான்கு வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இது தொடர்பாக ஈபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் புகார்தாரர் சூர்யமூர்த்தி ஆகியோருக்கு, தலைமைத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஈபிஎஸ் தாக்கல் செய்த பதில், தனக்கு வழங்கப்படவில்லை என புகார்தாரர் சூர்யமூர்த்தி தெரிவித்திருந்தார். மேலும், தனது கருத்துக்களை தெரிவிக்க முடியாததால், மனுவை பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு எட்டு வாரம் அவகாசம் வழங்குமாறும் சூரியமூர்த்தி மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் ஆணையம் நான்கு வாரத்தில் மனு மீது முடிவெடுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. மனு மீது முடிவெடுக்க கூடுதல் அவகாசம் வழங்க மறுத்து, சூரியமூர்த்தியின் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது.