இந்தியா
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக கூட்டணி வசமாகும் – ஸ்டாலின் நம்பிக்கை!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக கூட்டணி வசமாகும் – ஸ்டாலின் நம்பிக்கை!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திமுக கூட்டணி வசமாகும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 20) தெரிவித்துள்ளார்.
கோவையில் மறைந்த திமுக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இரா.மோகன் வீட்டிற்கு சென்று முதல்வர் ஸ்டாலின் இன்று அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இரா.மோகன் மறைவெய்தினார். அந்த நேரத்தில் நான் அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து செய்தி வெளியிட்டிருந்தேன்.
திமுக சாதாரண நகர செயலாளராக இருந்து சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி, திமுகவுக்கு பெருமை சேர்த்தவர். அவரது மறைவு என்பது கோவை மாவட்டத்திற்கு மட்டுமல்ல, திமுகவிற்கு மாபெரும் இழப்பாக உள்ளது. எனவே, அவர் இறந்த துயரத்தில் இருக்கக்கூடிய அவருடைய குடும்பத்தை சார்ந்தவருக்கு ஆறுதல் சொல்வதற்காக நான் இங்கு வந்தேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இந்த வட்டாரத்தில் இருக்கும் திமுக நிர்வாகிகளுக்கும் என்னுடைய ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
தொடர்ந்து ஈரோடு கள ஆய்விற்கு சென்று வந்துள்ளீர்கள். மக்கள் என்ன சொன்னார்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஸ்டாலின், “ஈரோடு கள ஆய்வினை பொறுத்தவரையில், இன்னும் வேகமாக உற்சாகத்தோடு பணியாற்றி வருகிறார்கள். வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 என்ற இலக்கை நாங்கள் வைத்திருக்கிறோம்.
ஈரோடு கள ஆய்வில் நான் உணர்ந்த உணர்வு என்ன என்று கேட்டால், 200-யையும் தாண்டிவிடுமோ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது” என்றார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க. வசமாகுமா? என்ற கேள்விக்கு, “திமுக கூட்டணி வசமாகும். ஏற்கனவே இந்தியா கூட்டணியில் திமுக அங்கம் வகிக்கிறது. எனவே, இந்தியா கூட்டணியின் வசமாகும்” என்றவரிடம்,
ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்படுமா? என்ற கேள்விக்கு, “அதை முறையாக அவர்களுடன் கலந்து பேசி முடிவெடுத்து அறிவிப்போம்” என்றார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் பற்றிய கேள்விக்கு, “அது கொடுமையான ஒரு முடிவு. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளக்கூடிய மோசமான செயலாகும். ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை அவர் சட்டப்படி சந்திப்பார்” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.