இந்தியா
கிரெடிட் கார்டு வைத்திருப்பவரா நீங்கள்? இந்த மோசடி கும்பலிடம் கவனமா இருங்க!
கிரெடிட் கார்டு வைத்திருப்பவரா நீங்கள்? இந்த மோசடி கும்பலிடம் கவனமா இருங்க!
இன்றைய டிஜிட்டல் காலத்தில் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதை பயன்படுத்துபவர்கள் அதிநவீன மோசடி திட்டங்களுக்கு இலக்காகி வருகின்றனர்.
வங்கி அதிகாரிகளாக தங்களைக் காட்டிக் கொண்டு, கிரெடிட் கார்டு வரம்புகளை அதிகரிப்பதாக கூறி, நுகர்வோரின் முக்கியமான தகவல்களைத் திருடியும், சந்தேகத்திற்கு இடமின்றி பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றியும் வந்த மோசடி கும்பலை சமீபத்தில் நொய்டா போலீசார் பிடித்துள்ளனர். இதுவரை இந்த மோசடியில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த மோசடி நடவடிக்கையின் பின்னணியில் உள்ள சூத்திரதாரி இன்னும் தலைமறைவாக உள்ளார்.
இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களை அணுகி, தாங்கள் வங்கிகளில் இருந்து வந்திருப்பதாகவும், அவர்களின் கடன் வரம்புகளை உயர்த்தும் சலுகை ஒன்று வந்துள்ளதாகவும் ஆசை வார்த்தை கூறுகின்றனர். மேலும் தங்கள் நம்பகத்தன்மையை அதிகரிக்க, அவர்களிடம் ஏற்கனவே ஏமாந்தவர்களின் கிரெடிட் கார்டு விவரங்களை காண்பித்து, தாங்கள் கொடுக்கும் சலுகைகள் உண்மையானது என நம்ப வைக்கின்றனர். இதனாலும், மக்களும் அவர்கள் சொல்வது உண்மை என நினைத்து எளிதில் ஏமாறுகிறார்கள்.
மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்ற “ஃபிஷிங்” எனப்படும் ஒரு முறையைப் பயன்படுத்துகின்றனர். இவர்கள் உண்மையான வங்கி இணையதளத்தைப் போலவே தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட போலி இணையதளங்களுக்கு செல்லும் இணைப்புகளை பாதிக்கப்பட்டவர்களின் போன்களுக்கு அனுப்புகின்றனர். மிகவும் எச்சரிக்கையாக இருக்கும் கிரெடிட் கார்டுதாரர்களைக் கூட முட்டாளாக்கும் அளவுக்கு இந்த போலித் தளங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த போலியான இணையதளத்தின் உள்ளே நுழைந்ததும், பாதிக்கப்பட்டவர்கள் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யும்படி தூண்டப்படுகின்றனர். பின்னர் இந்த செயலி, சம்பந்தப்பட்ட நபரின் கிரெடிட் கார்டு எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், பான் மற்றும் ஆதார் அட்டை விவரங்கள், கிரெடிட் கார்டு காலாவதி தேதிகள், சிவிவி (CVV) எண்கள் மற்றும் பல முக்கியமான தனிப்பட்ட தகவல்களை உள்ளிடுமாறு கேட்கிறது. இந்த தரவை வைத்துக்கொண்டு, மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்குகளின் முழு தகவலையும் பெறுகின்றனர்.
இப்படி சேகரித்த தகவல்களைப் பயன்படுத்தி, குற்றவாளிகள் விலையுயர்ந்த மொபைல் போன்கள், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் போன்ற அதிக மதிப்புள்ள பொருட்களை பல்வேறு ஈ-காமர்ஸ் (ஆன்லைன் வணிகம்) தளங்களில் இருந்து வாங்குகிறார்கள். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், இந்த பரிவர்த்தனைகளுக்கு தங்கள் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தப்படுவது பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியாது என்பதுதான்.
இப்படியொரு மோசடி நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, விரைந்து சென்ற போலீசார் மோசடிக் கும்பலைச் சேர்ந்த 6 பேரை கைது செய்தனர். இருப்பினும், போலி வங்கி இணையதளம் மற்றும் செயலியை உருவாக்கியதாக நம்பப்படும் இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ள மோசடிக் கும்பலின் சூத்திரதாரி இன்னும் பிடிபடாமல் தப்பித்து வருகிறார்.
இதற்கிடையில் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறும், கடன் வரம்புகளை அதிகரிப்பதற்கான சலுகைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற சலுகைகள் வந்துள்ளதா என நேரடியாக வங்கியிடம் கேளுங்கள். அதுமட்டுமின்றி அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் இணைப்புகளை ஒருபோதும் க்ளிக் செய்யாதீர்கள் என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.