இந்தியா
“கடுமையான சட்டங்கள் பெண்களின் நலனுக்காக.. கணவரை மிரட்டி பணம் பறிக்க அல்ல” – எச்சரித்த உச்சநீதிமன்றம்
“கடுமையான சட்டங்கள் பெண்களின் நலனுக்காக.. கணவரை மிரட்டி பணம் பறிக்க அல்ல” – எச்சரித்த உச்சநீதிமன்றம்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான அதுல் சுபாஷ் என்ற ஐடி ஊழியர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தற்கொலை செய்துகொண்டார். இவரிடம் இருந்து அவரது மனைவி விவாகரத்து கேட்டிருந்தார். இது தொடர்பான வழக்கு நடந்துவந்தது. இந்நிலையில், தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து அவர் மீது போலியான குற்றச்சாட்டுகளின் வழக்குப் பதிவு செய்தனர் என்றும், குழந்தையை காட்டாமல், பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் கூறி கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியது. அதேபோல், போபாலைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மனைவி ஜீவனாம்சம் வழங்கக் கோரி புனே குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கில், தனது கணவருக்கு அமெரிக்காவிலும், இந்தியாவிலும் பல தொழில்கள் இருப்பதாகவும், அவருக்கு ரூ. 5,000 கோடி சொத்து மதிப்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், அவரின் முதல் மனைவி விவாகரத்து பெற்று விலகியபோது அவருக்கு ஜீவனாம்சமாக ரூ. 500 கோடி வழங்கினார். அதேபோல், எனக்கும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு புனே நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், அவரது கணவர் ரூ. 8 கோடி ஜீவனாம்சம் வழங்க ஒப்புக்கொண்டார். இதனையடுத்து மனுதாரருக்கு நிரந்தர ஜீவனாம்சமாக ரூ. 10 கோடியை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.
ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத அவரின் மனைவி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மேல்முறையீடு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “இந்து திருமணமானது ஒரு குடும்பத்திற்கான அடித்தளமாக கருதப்பட வேண்டுமே தவிர, வணிக முயற்சிக்காக இருக்கக் கூடாது. திருமணம் தொடர்பாக சட்டத்தில் உள்ள கடுமையான விதிகள் பெண்களின் நலனுக்கானது. பெண்கள் தங்கள் கைகளில் உள்ள இந்த கடுமையான சட்ட விதிகள் அவர்களின் நலனுக்கான நன்மை பயக்கும் சட்டங்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
தங்கள் கணவர்களை தண்டிக்கவோ, அச்சுறுத்தவோ, ஆதிக்கம் செலுத்தவோ அல்லது மிரட்டி பணம் பறிக்கவோ பயன்படுத்தக் கூடாது. குற்றவியல் சட்டத்தில் உள்ள விதிகள், பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்பதற்காக உள்ளன. ஆனால் சில நேரங்களில் சில பெண்கள் அவர்களது தனிப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்துகிறார்கள்.
சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவரின் வயதான மற்றும் படுக்கையில் இருக்கும் பெற்றோர்கள், தாத்தா, பாட்டி உள்பட கணவரின் உறவினர்களைக் கூட போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்கிறார்கள்.
பராமரிப்பு அல்லது ஜீவனாம்சத்திற்கான விண்ணப்பத்தில், சொத்துக்கள், அந்தஸ்து மற்றும் வருமானத்தை முன்னிலைப்படுத்தி, அவர்களின் சொத்துக்களுக்கு இணையான தொகையைக் கேட்பது பெரும்பாலும் காணப்படுகிறது. இந்தப் போக்கு சரியானது அல்ல. ஜீவனாம்சம் நிர்ணயம் செய்வது பல்வேறு காரணிகளைப் பொறுத்தது. . எனவே, குற்றம் சாட்டப்பட்டவர், மனுதாரருக்கு ரூ.10 கோடியை ஜீவனாம்சமாக கொடுக்க வேண்டும் என்ற புனே குடும்ப நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்” என்று கூறி கணவர் மீது மனுதாரர் தொடர்ந்த அனைத்து குற்ற வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.