இந்தியா
ஜில்..ஜில்..ஐஸ் கட்டிகள்…!! டன் கணக்கில் எப்படி தயாராகிறது தெரியுமா ?
ஜில்..ஜில்..ஐஸ் கட்டிகள்…!! டன் கணக்கில் எப்படி தயாராகிறது தெரியுமா ?
வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகள் தயாரிப்பு.
பெரும் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ஐஸ் கட்டிகளானது (Ice cubes) பல்வேறு பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது. கடலுக்கு செல்லும் மீனவர்கள் மீன்களைப் பதப்படுத்துவதற்காக கிலோ கணக்கில் இந்த ஐஸ் கட்டிகளை பயன்படுத்துகின்றனர். மீன் சந்தைகளிலும், காய்கறி சந்தைகளிலும் இந்த ஐஸ் கட்டிகள் பெரும் அளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் குளிர்பானங்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அதிக அளவில் இந்த ஐஸ் கட்டிகளை பயன்படுத்துவது மீனவர்களே.
இவர்களுக்கு தான் இந்த ஐஸ் கட்டிகளானது அதிக அளவில் பயன்படுகிறது. ஏனென்றால், கடலுக்கு செல்லும் மீனவர்கள் கரை திரும்ப ஓரிரு நாட்கள் ஆகும். எனவே அவ்வப்போது, மீன்கள் கெட்டுப் போகாமல் பதப்படுத்தி வைக்க இந்த ஐஸ் கட்டிகளானது அதிக அளவில் மீனவர்கள் பயன்படுத்துகிறார்கள். மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கு மீன் ஏற்றுமதி செய்வதற்கும் இந்த நுட்பம் உதவியாக உள்ளது. இந்த ஐஸ் கட்டிகள், தொழிற்சாலைகளில் எவ்வாறு தயார் செய்யப்படுகிறது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
சேலம் மாவட்டம், மாமாங்கம் பகுதியில் கடந்த எட்டு வருடங்களாக ஐஸ் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கே சிறந்த முறையில் ஐஸ் கட்டிகளானது தயார் செய்யப்படுகிறது. இந்த ஐஸ் கட்டிகள் சுத்தமான தண்ணீரில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. ஐஸ் கட்டிகள் தயாரிக்க 24 மணி நேரம் செலவாகிறது. ஒரு தொட்டி நீரை வைத்து, அதனை 50 HP திறன் கொண்ட கம்ப்ரஸர் கருவிகள் மூலம் குளிர்வித்து ஐஸ் கட்டிகளை உருவாக்குகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, தற்போது 20 மணி நேரங்களில் 200 முதல் 250 வரையிலான ஐஸ் கட்டிகளை தயார் செய்ய முடியும்.
சென்னை, கடலூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி போன்ற மீன்பிடி துறைமுகங்கள் அதிக அளவில் இருப்பதால் இங்கெல்லாம் பெரும் ஐஸ் கட்டி தொழிற்சாலையில் இயங்குகிறது. இங்கு நாளொன்றுக்கு 800 முதல் 1000 வரையிலான ஐஸ் கட்டிகளை கூட தயார் செய்கின்றனர். ஒரு ஐஸ் கட்டி சுமார் 60 கிலோ எடை கொண்டது. இது 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த சேலம் ஐஸ் தொழிற்சாலை சிறிய தொழில் நிறுவனம் என்பதால் இங்கே தயார் செய்யப்படும் ஐஸ் கட்டிகள் சேலம், மேட்டூர், ஆத்தூர், ராசிபுரம் ஆகிய உள்ளூர் வணிகர்களுக்கு மட்டும் டெலிவரி செய்யப்படுகிறது.