இந்தியா

“தமிழில் பெயர்ப்பலகை வைக்கப் போராடினால் சிறையா? இதுதான் தமிழ்நாடு அரசு தாய்த்தமிழை வளர்க்கும் முறையா?” – சீமான்

Published

on

“தமிழில் பெயர்ப்பலகை வைக்கப் போராடினால் சிறையா? இதுதான் தமிழ்நாடு அரசு தாய்த்தமிழை வளர்க்கும் முறையா?” – சீமான்

“வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் இடம்பெறச் செய்ய வேண்டுமென கடந்த 08.02.24 அன்று வணிகர்களிடம் வலியுறுத்திய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனை ஏன் கைது செய்யவில்லை? அதே கருத்தை, கடந்த 23.07.24 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் நலவாரியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் ‘தமிழ்த்தெருவில் தமிழ் இல்லையென்று இனி யாரும் குறைகூற முடியாத நிலையை உருவாக்க வேண்டும்’ என்று கூறிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை ஏன் கைது செய்யவில்லை? அமைச்சர் பேசினால் சட்டம்? அடுத்தவர் பேசினால் குற்றமா” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வலியுறுத்திப் போராட்டம் நடத்த முயன்ற தமிழ்ப்பெயர்ப்பலகை பரப்புரை இயக்கத்தைச் சேர்ந்த தம்பிகள் தமிழ் முகிலன், தமிழ் மணி, மேகநாதன், சங்கர் உள்ளிட்டவர்களை திமுக அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

இந்தி எதிர்ப்புப் போரில் தமிழர்கள் செய்த அளப்பரிய ஈகங்களைத் தனதாக்கி, மொழிப்போர் மூலம் கிடைத்த முகவரியில் ஆட்சி அதிகாரத்தை அடைந்த திராவிட ஆட்சியாளர்கள் கடந்த 60 ஆண்டுகளில் தமிழ் மொழியை மெல்ல மெல்லச் சிதைத்து அழித்துவிட்டனர். தமிழ்நாட்டில் இன்றுவரை அன்னைத் தமிழ்மொழி வழிபாட்டு மொழியாகவோ, வழக்காட்டு மொழியாகவோ, பண்பாட்டு மொழியாகவோ, பயன்பாட்டு மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ, அதிகார மொழியாகவோ இல்லாத கொடுஞ்சூழல் நிலவுவது தமிழ்த்தேசிய இனத்திற்கு நிகழ்ந்த வரலாற்றுப் பெருந்துயராகும்.

‘மணக்கவரும் தென்றலிலே குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை? தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை’ எனப் புரட்சிப்பாவலர் பாரதிதாசன் வருந்திப்பாடி, 70 ஆண்டுகளைக் கடந்தும் தமிழகத்தின் வீதிகளில் பெயர்ப்பலகைகூடத் தமிழில் இல்லாதிருப்பது எந்தவொரு இன மக்களுக்கும் நிகழ்ந்திடக்கூடாப் பெருங்கொடுமையாகும். அரசு அலுவலகங்களில் ‘தமிழ் வாழ்க’ என்று எழுதியதைத் தவிர, திமுக அரசு அன்னை தமிழின் வளர்ச்சிக்குச் செய்த நன்மை என்ன? தமிழ் வாழ்க என்று அரசு நிறுவனத்தில் எழுதி வைத்துவிட்டு தனியார் நிறுவனங்களை தமிழில் பெயர் வைக்கக்கோரி போராட்டம் நடத்துபவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் தமிழை வளர்க்கும் முறையா?

Advertisement

வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் இடம்பெறச் செய்ய வேண்டுமென கடந்த 08.02.24 அன்று வணிகர்களிடம் வலியுறுத்திய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனை ஏன் கைது செய்யவில்லை? அதே கருத்தை, கடந்த 23.07.24 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் நலவாரியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் ‘தமிழ்த்தெருவில் தமிழ் இல்லையென்று இனி யாரும் குறைகூற முடியாத நிலையை உருவாக்க வேண்டும்’ என்று கூறிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை ஏன் கைது செய்யவில்லை? அமைச்சர் பேசினால் சட்டம்? அடுத்தவர் பேசினால் குற்றமா? முதலமைச்சரின் குடும்பத்தினர் நடத்தும் தொலைக்காட்சி நிறுவனங்கள், திரைப்படத் தயாரிப்பு நிறுவனம், குடிநீர் நிறுவனம் உள்ளிட்ட எந்த வணிக நிறுவனத்தின் பெயராவது தமிழில் உள்ளதா? இதுதான் எந்தக் கொம்பனும் குறைகூற முடியாத ஆட்சியா?

தமிழில் பெயர்ப்பலகை வைக்கப் போராடினால் சிறையா? இதுதான் தமிழ்நாடு அரசு தாய்த்தமிழை வளர்க்கும் முறையா?@CMOTamilnadu @mkstalin

காஞ்சிபுரத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்த முயன்ற தமிழ்ப்பெயர்ப்பலகை பரப்புரை இயக்கத்தைச் சேர்ந்த… pic.twitter.com/vXapmDH0pd

Advertisement

தொடர்ச்சியாக 60 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடக் கட்சிகள் தமிழர் நிலத்தை ஆண்ட பிறகும் தமிழ்நாட்டுத் தெருக்களில் பெயர்ப்பலகைகள் கூட தமிழில் இல்லை என்பதைவிட வேறென்ன கேவலம் இருக்க முடியும்? கர்நாடக மாநிலத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் கன்னட மொழியிலேயே பெயர்ப்பலகை வைக்க வேண்டுமென அம்மாநில அரசு தனிச்சட்டம் இயற்றி அதனைத் தீவிரமாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டுமென்ற ஆட்சிமொழிச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமெனக் கோரி போராடுபவர்களை தமிழ்நாடு அரசே கைது செய்து சிறைப்படுத்துவதை விடக் கொடுமை என்ன இருக்க முடியும்?

ஆகவே, வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வலியுறுத்திப் போராடியதற்காக கைது செய்யப்பட்டுள்ள தம்பிகள் தமிழ் முகிலன், தமிழ் மணி, மேகநாதன், சங்கர் உள்ளிட்டவர்களை தமிழ்நாடு அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன். மேலும், தமிழ்நாட்டில் செயல்படும் பெரிய வணிக நிறுவனங்கள் முதல் சின்னஞ்சிறு கடைகள் வரை அனைத்திலும் அன்னைத் தமிழில் பெயர்ப்பலகை வைப்பதை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version