இந்தியா
ஹரியானா முன்னாள் முதல்வர் சௌதாலா காலமானார்; நயாப் சிங் சைனி இரங்கல்
ஹரியானா முன்னாள் முதல்வர் சௌதாலா காலமானார்; நயாப் சிங் சைனி இரங்கல்
ஹரியானா மாநில முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக் தள் கட்சியின் தலைவருமான ஓம் பிரகாஷ் சௌதாலா (89) இன்று குருகிராமில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
இந்தியாவின் முன்னாள் துணை பிரதமரான தேவி லாலின் மகனும் இந்திய தேசிய லோக் தள் கட்சியின் தலைவருமான ஓம் பிரகாஷ் சௌதாலா ஹரியானா மாநிலத்தில் ஐந்து முறை முதல்வராக பதவி வகித்தவர்.
இவர் தனது ஆட்சிக் காலத்தில் நடந்த ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு கடந்த 2013ம் ஆண்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர். திஹார் சிறையில் தண்டனையை அனுபவித்து வந்த இவர் கடந்த 2020ம் ஆண்டு பரோலில் வெளியேவந்து ஹரியானா மாநிலம், குருகிராமில் உள்ள தனது இல்லத்தில் வசித்துவந்தார். பிறகு 2021ம் ஆண்டு சிறை தண்டனை நிறைவு செய்து விடுதலையானார்.
இந்நிலையில், இன்று பிற்பகல் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
இவரது மறைவுக்கு ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, “இந்திய தேசிய லோக் தள கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா மறைவு அறிந்து வருந்துகிறேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மாநிலத்திற்காகவும் சமூகத்திற்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்தவர். மேலும், அவரது மறைவு ஹரியானாவுக்கும் தேசிய அரசியலுக்கு பெரும் இழப்பு” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ஹரியானா மாநில முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான ஓம் பிரகாஷ் சௌதாலா மறைவை அறிந்து வருத்தமடைந்தேன். அவர் ஹரியானா மற்றும் நாட்டுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொடுத்தவர். இந்த வருத்தமான நேரத்தில் எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.