இந்தியா
1964 Dhanushkodi Cyclone: தமிழகத்தின் சிங்கப்பூர் தனுஷ்கோடி… நினைவை பகிரும் 1964 ஆம் ஆண்டு புயலை நேரில் கண்ட தனுஷ்கோடி மீனவர்…
1964 Dhanushkodi Cyclone: தமிழகத்தின் சிங்கப்பூர் தனுஷ்கோடி… நினைவை பகிரும் 1964 ஆம் ஆண்டு புயலை நேரில் கண்ட தனுஷ்கோடி மீனவர்…
தமிழகத்தின் சிங்கப்பூர் தனுஷ்கோடி
பரபரப்பாக இயங்கிக் கொண்டு, சுற்றுலா பயணிகள் நிரம்பி வழிந்து நிற்கும் இடமாக குளிர்ந்த காற்றோடு இருபுறமும் கண்ணிற்கு விருந்தளிக்கும் நீல நிறத்தில் இருக்கும் கடல்கள், அதில் தேனீக்களாக சுறுசுறுப்புடன் மீன்பிடித்து சுற்றி வரும் மீனவர்கள், பறவைகளின் கூக்குரல் சத்தம் என தொழில் வளர்ச்சியிலும் மிகப்பெரிய வணிகத்திற்கான மையப்புள்ளியாக இருந்து ‘‘குட்டி சிங்கப்பூர்’’ என்ற பெயர் பெற்ற பகுதி தான் தனுஷ்கோடி. இப்படியான ஒரு 60 ஆண்டுகளுக்கு முன் இருந்த தனுஷ்கோடி, 1964-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி நள்ளிரவு மன்னார் வளைகுடா கடலில் உருவாகிய புயலினால் ஆழிப்பேரலைகள் கோரத்தாண்டவமாடி ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்களை காவு வாங்கி சாந்தம் அடைந்தது.
இந்த நிலையில் இந்த புயலில் இருந்து தப்பிய தனுஷ்கோடியின் பூர்வகுடி மீனவர்கள் வேறு வழியின்றி வாழ்வாதாரம் காக்க ராமேஸ்வரம் பகுதியில் வாழத்தொடங்கினர். இதன்பின் புயலில் மிஞ்சிய இடமாக ஆங்கிலேயர் அமைத்த விநாயகர் கோவில், தேவாலயம், தபால் நிலையம், ரயில் நிலையம், சுங்க அலுவலகம் போன்றவை இருந்து வருகின்றன. 2017-ம் ஆண்டிற்கு பின் தேசிய நெடுஞ்சாலை துறையின் மூலம் அரிச்சல்முனை வரை சாலை அமைக்கப்பட்டு பேருந்து வசதி மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் சென்று வர அனுமதி அளித்தது.
இதன்பின் தினமும் நாடு முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்றுவிட்டு தனுஷ்கோடியை பார்வையிட படையெடுத்து வரத்தொடங்கி சுற்றுலா ஸ்தலமாக மாற்றம் பெற்று கொஞ்சம் கொஞ்சமாக பழைய தனுஷ்கோடியாக புத்துயிர் பெற்று வருகிறது. இந்த கோர புயலில் உயிர் தப்பி வாழ்ந்து வரும் முதியவர் புருசோத்தமன் 1964-ம் ஆண்டு ஏற்பட்ட புயலை கண்முன் கொண்டு வந்து நினைவு கூர்ந்தார்.
‘‘புயலின் போது வயது தனக்கு 14 வயது’’ என்றும். ‘‘தன்னுடைய அப்பா ரயில்வேயில் வேலை பார்த்ததால் ரயில்வே கோட்ரஸில் உள்ள வீட்டில் குடும்பத்தோடு இருந்தோம். டிசம்பர் 22-ம் தேதி சாதாரண காற்றாக வீசி பலத்த சூறைக்காற்றாக மாறியது. பலத்த மழை பெய்து காற்றில் கடல்நீர் வெள்ளமாக தங்களுடைய குடியிருப்புகளை சுழத்தொடங்கி கழுத்தின் அளவிற்கு தண்ணீர் வந்து மழையின் வெளியே செல்ல முடியாமல் வெளியே சென்றால் மரண அச்சத்துடன் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருந்து அன்றைய இரவை கழித்தோம்’’ என தெரிவித்தார்.
‘‘விடிந்ததும் மழை காற்று நின்ற பிறகு வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது கை, கால், தலை தனியாக அடையாளம் தெரியாமல் கிடந்து பிணங்கள், பறவைகள் வீட்டு விலங்குகள் அனைத்தும் இறந்து கிடந்தன. அக்னி தீர்த்தத்தில் நீராடுவது போல் தனுஷ்கோடி வந்து நீராடி, கோயம்புத்தூர், மதுரை, சென்னை ரயிலில் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். தினமும் நான்கு ரயில் வரும் நான்கு ரயில் இங்கிருந்து செல்லும். புயல் நாளன்று இரவு 7:30 மணிக்கு மதுரையில் இருந்து வரும் ரயிலில் 1000-க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள், மாணவர்கள் வந்தனர்.
புயலில் மின்தொடர்பு இன்றி சிக்னல் கிடைக்காததால் ரயில் நிறுத்தப்பட்டு கடல் அலையில் ரயில் என்ஜின் தவிர ரயில் பெட்டிகளோடு மனிதர்களும் அடித்து கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு இறந்தனர். வீட்டை பூட்டி விட்டு நடந்து சென்ற 15 கிலோமீட்டர் தொலைவில் ராமேஸ்வரத்திற்கும் தனுஷ்கோடிக்கும் இடையே உள்ள பகுதிக்கு வந்தபோது மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்த என்னுடைய அப்பா பார்த்து விட்டு எங்களை மண்டபத்திற்கு அழைத்து சென்று அங்கு வாழத்தொடங்கினோம்.
அப்போது காமராஜர் வந்து புயலால் அழிந்த இடங்களையும், பாதித்த மக்களையும் பார்த்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது ஜெமினி கணேசன், சாவித்திரி ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக வந்து மாட்டிக்கொண்டார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக ரூ.25,000 காமராஜரிடம் வழங்கினர்.
அப்போது வந்த புயல் தான் அதன் பிற்காலத்தில் நவம்பர், டிசம்பர் மாதம் வந்தாலே ‘‘புயல் புயல் புயல்னு புயல் உருவாகிட்டே இருக்கு. ஆனால் அந்த புயல் மாதிரி எந்த புயலும் பார்க்க முடியாது. மீண்டும் இங்கு புயல் வந்தால் மொத்தமாக அழிச்சு எல்லாத்தையும் கடலுக்குள்ள கொண்டு போகி நிலப்பரப்பு கடல் சூழ்ந்த இடமாக மாறிவிடும்.’’
‘‘பழையபடி சாலை வந்துருச்சு, ரயில் வரப்போதுன்னு சொல்லுறாங்க, வருங்காலத்தில் பழைய தனுஷ்கோடியாக வளர்ந்து வருமே தவிர அழியாது என்ற நம்பிக்கை இருக்கு என புயலில் தப்பிய கடைசி மனிதனாக தலைய தலைய ஆட்டிக்கிட்டு இருக்கேன்’’ என சோகம் கலந்ததாக புருஷோத்தமன் பேச்சு இருந்தது.