இந்தியா

“விடுதலை -2 திரைப்படம் நக்சலைட்டுகளுக்கு ஆதரவாக உள்ளது.. மத்திய அரசு கண்காணிக்க வேண்டும்” – அர்ஜுன் சம்பத்

Published

on

“விடுதலை -2 திரைப்படம் நக்சலைட்டுகளுக்கு ஆதரவாக உள்ளது.. மத்திய அரசு கண்காணிக்க வேண்டும்” – அர்ஜுன் சம்பத்

இந்து மக்கள் கட்சியின் தென்மண்டல செயற்குழு கூட்டம் கோவில்பட்டியில் இன்று தனியார் ஹோட்டலில் நடந்தது. கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை வகித்துப் பேசினார். இந்தக் கூட்டத்தில், மகளிர் அணி மாவட்ட செயலர் பத்மப்ரியா, இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் வசந்தகுமார், மாவட்டச் செயலாளர் லட்சுமி காந்தன் மற்றும் கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

தொடர்ந்து அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசியது; “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் சாதிய ரீதியிலான மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர் மீது தமிழக முதல்வர் கடும் நடவடிக்கை எடுத்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சாதிய ரீதியான கொலைகள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் ஈடுபடுவோர் ஜாமீனில் வெளிவராத வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.

கேரளாவில் உள்ள கனிம வளங்களை எடுக்க அனுமதி இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து தினமும் கனிமங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன. ஆனால் கேரளாவில் இருந்து இங்கு வந்து இரவோடு இரவாக மருத்துவக் கழிவுகளை கொட்டி விட்டுச் சென்று விடுகின்றனர். எனவே தமிழ்நாட்டில் இருந்து கனிம வளங்கள் கடத்தப்படுவதையும், கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு மருத்துவக் கழிவுகள் கொண்டு வருவதையும் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் தான் பயங்கரவாதமும், பிரிவினைவாதமும் தலை தூக்கிக் கொண்டு இருக்கிறது. தற்போது ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள விடுதலை -2 திரைப்படம் முழுக்க முழுக்க நக்சலைட்டுகளுக்கு ஆதரவாக உள்ளது. இந்தத் திரைப்படம் இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டுதலை ஏற்படுத்தும். இது போன்ற திரைப்படங்களை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும். மத்திய அரசு கொண்டுவரும் நல்ல பல திட்டங்களைத் தடுக்கும் ஒரு சிலரால் தென் மாவட்டங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள் மட்டுமே எதிர்க்கின்றன.

Advertisement

தமிழகத்தில் ஆங்காங்கே புத்தகக் கண்காட்சிகள் மூலம் கம்யூனிஸ்ட்கள், திராவிட கழகங்கள் இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் கடவுள் மறுப்பு பிரச்சாரத்தை செய்து வருகின்றன. இந்து மதம் மற்றும் சனாதனத்துக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. பிராமண சமுதாயத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும், இந்து மக்கள் கட்சி, பாஜக மீது பழிவாங்கும் மற்றும் ஒடுக்குகின்ற எண்ணத்தோடு பொய் வழக்கு போடுவதை கண்டித்தும் ஜனவரி 5ஆம் தேதி மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற உள்ளது. அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தவறான கருத்துகளைத் தெரிவிக்கவில்லை. அம்பேத்கர் கொள்கைகளை ஏற்று நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பது பாஜக ஆட்சி தான்” என்றார்.

தொடர்ந்து கோவில்பட்டி காந்தி நகரில் கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுவன் கருப்பசாமி வீட்டுக்குச் சென்ற அர்ஜுன் சம்பத் மற்றும் தென்னிந்திய பார்வர்டு பிளாக் நிறுவனத் தலைவர் திருமாறன் ஆகியோர், சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினர். பின்னர் கிருஷ்ணன் கோயில் திடலில் இந்து மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version