இந்தியா
பொங்கல் தொகுப்பு எப்போது வழங்கப்படும்.. என்னவெல்லாம் இருக்கும்? – கூடுதல் தலைமைச் செயலாளர் கொடுத்த அப்டேட்
பொங்கல் தொகுப்பு எப்போது வழங்கப்படும்.. என்னவெல்லாம் இருக்கும்? – கூடுதல் தலைமைச் செயலாளர் கொடுத்த அப்டேட்
சுனாமியின் போது தனது பெற்றோர்களை இழந்த குழந்தைகள் என்னை அப்பா என அழைத்தவர்கள் இன்று பெரியவர்களாக வளர்ந்து திருமணமாகி பிள்ளைகளை ஈன்றெடுத்துள்ளதால் என்னை தாத்தா ஸ்தானத்திற்கு ப்ரோமோஷன் கொடுத்தாக கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நாகையில் நெகிழ்ச்சி பேட்டி.
கடந்த 2004-ம் ஆண்டு சுனாமியின் போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் 6065 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது நினைவாக நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் சுனாமி நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 26-ம் தேதி 20-ம் ஆண்டு சுனாமி நினைவு தினமும் அனுசரிக்கப்பட உள்ளது.
இதை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வருகை தந்தார். நாகப்பட்டினத்தில் உள்ள அன்னை சத்யா குழந்தைகள் காப்பகத்திற்கு சென்றார்.
அங்கு சுனாமியின் போது பெற்றோர்களை இழந்து தங்கி பயின்று வளர்ந்து வந்த 40-க்கும் மேற்பட்ட பிள்ளைகளை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து அன்னை சத்யா காப்பகத்தில் தங்கிப் பயின்று தற்போது திருமணமாகிக் குழந்தைகள் ஈன்றெடுத்த பெண் பிள்ளைகளை ராதாகிருஷ்ணன் மற்றும் ஆட்சியர் ஆகாஷ் ஆகியோர் சந்தித்து அவர்களிடம் நலம் விசாரித்தனர்.
அப்போது அவர்களின் குழந்தைகளை கைகளில் தூக்கிக் கொஞ்சியதோடு சிறு பிள்ளையாக காப்பகத்தில் சேர்க்கப்பட்ட அன்னாளின் நினைவுகளை அவர்களிடம் கேட்டார். அதனைத் தொடர்ந்து சுனாமியில் பெற்றோரை இழந்து பிள்ளைகளுக்கு சால்வை அணிவித்து புத்தகங்களை ராதாகிருஷ்ணன் வழங்கினார். பின்னர் பிறந்து 22 நாட்களாகிப் பெயர் வைக்காத ஒரு குழந்தைக்கு ராஜி எனப் பெயர் சூட்டினார்.
பின்னர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: “இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டாலும் அதிலிருந்து மீண்டு வந்து இன்று சமூகத்தில் பல்வேறு நிலைகளில் இந்தப் பிள்ளைகள் உயர்ந்து உள்ளனர். இவர்கள் எல்லோருக்கும் எடுத்துக்காட்டாகவும், உந்துதலாகவும் உள்ளனர்.
சுனாமியின் போது என்னை அப்பா என அழைத்தவர்கள், இன்று பெரியவர்களாக வளர்ந்து திருமணமாகி பிள்ளைகளை ஈன்றெடுத்துள்ளதால் என்னை தாத்தா ஸ்தானத்திற்கு ப்ரோமோஷன் கொடுத்துள்ளனர். பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து முதல்வர் அறிவிப்பார். இந்தத் தொகுப்பு வழங்குவதற்காக அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை கொள்முதல் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்களுக்கு முன்பாகவே தொகுப்பு வழங்கப்படும்” என்றார்.