இந்தியா

அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் : எடப்பாடி

Published

on

அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் : எடப்பாடி

பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் இந்த வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக் கழகத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவி விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இந்த வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த விவகாரத்தில் உரிய நீதிக் கிடைக்க வேண்டும் என தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

Advertisement

!

அப்போது, ”முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் எளிமையானவர், பொருளாதார நிபுணர். அவர் நிதியமைச்சராக இருந்தபோது தனது திறமையால் இந்தியாவை பெரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டவர். 10 ஆண்டுகாலம் இந்திய நாட்டின் பிரதமாராக இருந்து ஆட்சி புரிந்தவர். அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவம் இன்று தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்பது அனைத்து மாணவர்களின் கனவு. இந்தியாவில் சிறந்த பல்கலைக்கழகமாக இப்பல்கலைக்கழகம் உள்ளது. உலகளவிலும் புகழ்பெற்றதாக உள்ளது.

Advertisement

இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி இரவு ஞான சேகர் என்பவர் அந்த பல்கலை வளாகத்தில் அத்துமீறி நுழைந்து, அங்கு பேசிக்கொண்டிருந்த மாணவரை அடித்து உதைத்து, மாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கின்றார்.

அந்த நேரத்தில் ஞானசேகரனுக்கு வந்த செல்போனில் ‘சார்.. சார்…’ எனப் பேசியதாக அந்த மாணவி புகாரில் தெரிவித்திருக்கிறார். அந்த சார் யார் என்பதை இப்போதுவரை வெளிப்படுத்தவில்லை.

ஆனால் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டவர் ஒருவர்தான் என்றும் அவர் ஞான சேகர் தான் என்றும் காவல்துறை உயரதிகாரி குறிப்பிடுகிறார். அந்த மாணவி புகாரில் குறிப்பிட்ட அந்த சார் யார் என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை. அதை மறைக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

Advertisement

!

பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயிலும் கல்லூரிக்குள் ஒருவர் எப்படி அடிக்கடி சென்று சுற்றித் திரிய முடியும்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பயிலும் மாணவர்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? இன்று பெற்றோர்கள் அச்சப்படுகிறார்கள்.

Advertisement

மேலும் பல்கலைக்கழகத்தில் உள்ள 70 சிசிடிவி கேமராவில் 56 சிசிடிவி கேமராதான் இயங்குவதாக தெரிவிக்கிறார்கள். அப்படியானால் மற்றவை ஏன் இயங்கவில்லை? இது கண்டிக்கத்தக்கது.

கைது செய்யப்பட்ட ஞானசேகர் சரித்திரப் பதிவேடு இருக்கும் குற்றவாளி. இவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இப்படி சரித்திர பதிவேடு குற்றவாளி எப்படி அண்ணா பல்கலைக் கழகத்திற்குள் அடிக்கடி சென்றுவர முடியும்? அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நிலவியது. காவல்துறைக்கு சுதந்திரம் இருந்தது.

ஞானசேகரனை 24-ம் தேதி விசாரித்தவுடன் அவரை வெளியே விடுகிறார்கள். அவர் கைது செய்யப்படாமல் எந்த விதத்தில் விடுவிக்கப்பட்டார்? இது எப்படி சரியான நடவடிக்கை?

Advertisement

காவல்துறை ஆணையர் 100-க்கு புகார் வந்தவுடன் புகார் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கிறார். ஆனால் மாணவி காவல் நிலையத்தில் தான் நேரில் புகார் அளித்ததாக அமைச்சர் தெரிவிக்கிறார். இந்த முரண்பட்ட கருத்துகளால் மக்களுக்கு சந்தேகம் வருகிறது. குற்றம்சாட்டப்பட்டவர் பல்வேறு அமைச்சர்களுடன், தி.மு.க-வுடன் நெருக்கமானவர் என்றெல்லாம் செய்திகள் வெளியாகிறது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் இந்த வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

அண்ணா நகரில் சிறுமிக்கு கொடுக்கப்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பாக அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புகாரை போலீசாரின் அலட்சியம் காரணமாக உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து, அந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

Advertisement

இதை எதிர்த்து ஆளும் அரசு உச்ச நீதிமன்றம் சென்று மேல் முறையீடு செய்கிறது. பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக தி.மு.க அரசு செயல்படுகிறது என்பது வெட்கக்கேடு. இது எந்த விதத்தில் நியாயம்?

சென்னை சிந்தாந்தரிபேட்டையில் படித்து வந்த மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை 10க்கும் மேற்பட்டவர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுதொடர்பாக புகார் அளித்தும் வழக்கம்போல வழக்கு கிடப்பில் போடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலில் அரசு மருத்துவமனை செவிலியரின் அந்தரங்கப் புகைப்படத்தைக் காட்டி 10 லட்சம் ரூபாய் கேட்டதாக ஒருவர் மீது புகார் அளிக்கப்படுகிறது. அவர் தி.மு.க நிர்வாகி என பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகிறது. அவருக்கு சட்டத்துறை அமைச்சர் பாதுகாப்பு அளித்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகிறது. இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டும் 15 நாட்கள் கிடப்பில் போடப்பட்டது.

Advertisement

இன்று திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலையும், குற்றவாளிகள் அச்சமின்றி சுற்றித்திரியும் சூழ்நிலையும் நிலவுகிறது. வேலியே பயிரை மேய்ந்த நிலை தான் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி உள்ளது.

வரும் 30-ம் தேதி இந்த அரசை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இரண்டுமுறை ஆளுநரை சந்தித்திருக்கிறோம். மீண்டும் ஆளுநரை விரைவில் சந்திப்போம்” என்று எடப்பாடி தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version