இந்தியா

ஒருவர் தான் குற்றவாளியா? காவல் ஆணையர் எப்படி முடிவுக்கு வந்தார்?: அண்ணா பல்கலை. மாணவி வழக்கு… உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published

on

ஒருவர் தான் குற்றவாளியா? காவல் ஆணையர் எப்படி முடிவுக்கு வந்தார்?: அண்ணா பல்கலை. மாணவி வழக்கு… உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 23ஆம் தேதி இரவு அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இந்தநிலையில் அண்ணா பல்கலை மாணவி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி, வழக்கறிஞர்கள் வரலட்சுமி, மோகன்தாஸ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் வி லட்சுமி நாராயணன் அமர்வில் இன்று (டிசம்பர் 27) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் சார்பில், “வழக்கு தொடர்பான எப்.ஐ.ஆரை போலீசார் வெளியிட்டது சட்டவிரோதம். எப்.ஐ.ஆர் வெளியானதை காவல் ஆணையர் ஒப்புக்கொண்டதால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

Advertisement

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்ட சட்டப்பிரிவை மீறி எப்.ஐ.ஆர் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இடைக்காலமாக இந்த வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என்று வாதிடப்பட்டது.

மேலும், “கைது செய்யப்பட்டவர் மீது 20 வழக்குகள் இருப்பதாக காவல் அணையரே கூறியிருக்கும் நிலையில், அவரது பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.

கைது செய்யப்பட்ட நபர் மீது இந்த வழக்கை தவிர, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வேறு வழக்கு இல்லை என்று காவல் ஆணையர் கூறியிருக்கிறார். இருந்தாலும் அவர் மீதான மற்ற வழக்குகள் குறித்தும் விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

Advertisement

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “இந்த வழக்கு புலன் விசாரணையில் இருக்கும் போது, ஒருவர் மட்டுதான் குற்றவாளி என்று காவல் ஆணையர் எப்படி முடிவுக்கு வந்தார். கைதானவரின் காலில் ஏன் பேண்டேஜ் போடப்பட்டுள்ளது” என்று கேள்விகளை எழுப்பினர்.

இதற்கு தமிழக அரசு தரப்பில், “பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட நபரின் பெயர் மட்டுதான் குறிப்பிடப்பட்டுள்ளது என்றுதான் ஆணையர் பேட்டி அளித்தார். மேலும் கைது செய்யப்பட்டவரை விசாரணைக்கு அழைத்துச் செல்லும்போது தப்பி ஓட முயன்றார். அவரை பிடிக்க போலீசார் விரட்டிச் சென்ற போது தவறி விழுந்து காயம் ஏற்பட்டது ” என்று பதிலளிக்கப்பட்டது.

இந்நிலையில் நீதிபதிகள், அரசு அதிகாரிகள் நடத்தை விதிகளில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கும் முன் அரசு அனுமதி பெற வேண்டுமா? என்பது குறித்தும், எப்.ஐ.ஆர் வெளியானது குறித்தும், அதற்கு யார் பொறுப்பு என்பது குறித்தும் தமிழக அரசும், காவல் துறையும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். நிர்பயா நிதி எப்படி செலவிடப்படுகிறது என அதன் விரங்கள் குறித்தும் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Advertisement

தொடர்ந்து, மாணவிகளின் பாதுகாப்புக்காக அண்ணா பல்கலைக் கழகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? பல்கலைக் கழக விசாகா கமிட்டியில் எத்தனை பாலியல் புகார்கள் வந்துள்ளன என்பது குறித்து அண்ணா பல்கலைக் கழகம் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவி தைரியமாக முன்வந்து புகார் கொடுத்ததற்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், “பாதிக்கப்பட்ட மாணவியை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. கைதானவர் 10 ஆண்டுகளாக அண்ணா பல்கலை கழகத்தில் உலாவி வந்திருக்கிறார் அதை பற்றி விசாரித்தீர்களா?” எனவும் காவல்துறைக்கு கேள்வி எழுப்பினர்.

“பெண்கள் ஆண்களிடம் பேசக் கூடாது. பாதிக்கப்பட்ட மாணவி அந்த இடத்துக்கு சென்றிருக்கக் கூடாது என்றெல்லாம் பேசக் கூடாது. பெண்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. காதல் செய்வது பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம்” எனவும் இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version