இந்தியா
வேலியே வேலியை மேய முயற்சி : பெண் காவலருக்கு போலீஸ் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ செய்த காரியம்!
வேலியே வேலியை மேய முயற்சி : பெண் காவலருக்கு போலீஸ் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ செய்த காரியம்!
அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், எஸ்.எஸ்.ஐ ஒருவர் பெண் போலீசிடம் தவறாக நடக்க முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் ராஜபாளையம் அருகே தொம்பக்குளத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். 53 வயதான இவர், ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக (எஸ்.எஸ்.ஐ )பணிபுரிந்து வருகிறார். மலையடிப்பட்டியில் உள்ள காவலர் குடியிருப்பில் மோகன்ராஜ் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கடந்த 23-ம் தேதி இரவு பணியிலிருந்த மோகன்ராஜ் மது அருந்தியுள்ளார். மதுபோதை அதிகமான நிலையில், காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் காவலரிடம் தவறாக நடக்க முயன்றார். அதிர்ச்சியடைந்த பெண் காவலர் அளித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.ஐ. மோகன்ராஜ் உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி கண்ணன் விசாரித்து வந்தார்.
பெண் காவலரிடம் தவறாக நடக்க முயன்றது, பணியின்போது மது அருந்தியது போன்ற காரணங்களுக்காக எஸ்.எஸ்.ஐ. மோகன்ராஜுவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டார். மோகன்ராஜ் மீது துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது.
பெண் போலீஸிடம் மோகன்ராஜ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காட்சிகள் காவல் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவிலும் பதிவாகியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்ணா பல்கலையில் நடந்த பாலியல் வன்கொடுமை மாநிலத்தையே உலுக்கியுள்ள நிலையில், எந்த பயமும் இல்லாமல் பெண் போலீஸ் நிலையத்தில் காவல் நிலையத்திலேயே எஸ்.எஸ்.ஐ தவறாக நடந்து கொண்டதை என்னவென்று எடுத்துக் கொள்ள முடியும்?
பாலியல் வன்கொடுமை: அடிக்கடி அண்ணா பல்கலைக்கழகம் சென்ற ஞானசேகரன் – கோவி.செழியன் சொல்வதென்ன?