இந்தியா

பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா… இந்தியாவின் மிகவும் சவாலான உறவுகளை மன்மோகன் சிங் வழிநடத்தியது எப்படி?

Published

on

பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா… இந்தியாவின் மிகவும் சவாலான உறவுகளை மன்மோகன் சிங் வழிநடத்தியது எப்படி?

கருத்து: டாக்டர் சி. ராஜா மோகன் 1991-96ல் நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குஅடித்தளம் அமைத்தார். அதன் விளைவாக உலக அரங்கில் இந்தியாவின் எழுச்சிக்கும் வித்திட்டார். 2004 முதல் 2014 வரையில் அவர் பிரதமராகப் பதவி வகித்த பத்தாண்டு காலம் மிகவும் போற்றப் படவில்லை என்றாலும் கூட, இந்த ஆட்சிக் காலம் அண்டை நாடுகளுடன் அமைதியைக் காக்கவும், அமெரிக்காவுடன் இணைந்து உலகளாவிய கூட்டாண்மையை ஏற்படுத்தவும் ஏற்ற வெளியுறவுக் கொள்கையை உருவாக்க உதவியது.ஆங்கிலத்தில் படிக்கவும்: Pakistan, China, US: How Manmohan Singh navigated India’s most challenging relationshipsஆனால் அவரது சொந்தக் கட்சியிலேயே கொடுக்கப் பட்ட தொந்தரவுகள், அரசியல் அரங்கத்தில் இடது மற்றும் வலதுசாரிகளின் எதிர்ப்பு, நிர்வாக மற்றும் வெளியுறவுக் கொள்கை அதிகாரவர்க்கத்தின் ஒத்துழையாமை ஆகியவை, சிங் தனது பதவிக்காலத்தின் ஆரம்ப காலங்களில் ராஜதந்திர சாத்தியங்களை உருவாக்க விடாமல் தடுத்தன.அவர் பிரதமராகிய சில வாரங்களுக்குள், 2005 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே, இந்தியாவின் மூன்று சவாலான உறவுகளில் – பாகிஸ்தான், சீனா மற்றும் அமெரிக்காவுடன் முக்கிய முன்னேற்றங்களை அடையும் வாய்ப்பைப் பெற்றார். 2005 ஆம் ஆண்டு வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும் அவர் எடுத்த மூன்று ராஜதந்திர முயற்சிகளே அவர் பிரதமராக இருந்த எஞ்சிய காலத்தில் அவரது வெளியுறவுக் கொள்கையாக வெளிப்பட்டன.உண்மையில், அடல் பிஹாரி வாஜ்பாய் (1998-2004) ஆட்சியில் அடையப்பட்ட இந்த மூன்று சாத்தியக்கூறுகளின் பலன் மன்மோகன் சிங் ஆட்சியில் கிடைத்தது. எப்படியாயினும், வெளியுறவுக் கொள்கை என்பது ஒரு அரசாங்கத்துடன் முடிவடைந்து மற்றொரு அரசாங்கத்துடன் தொடங்காத ஒரு தொடர்ச்சியாகும். ஆனால் ஒவ்வொரு அரசாங்கமும் ஒரு கொள்கையுடன் அமைகிறது.  அதன் உலகக் கண்ணோட்டம், அரசியல் விருப்பம் மற்றும் உள்நாட்டுத் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அதன் வெளியுறவுக் கொள்கை அமைகிறது.ஆனால், முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது நீங்கள் உறவை மேம்படுத்த எண்ணினாலும் அதனை நிராகரிக்கும் உரிமை உறவாடும் நாடுகளுக்கு உள்ளது என்பதே. இது நம்மைப் பற்றியது மட்டும் அல்ல. வாய்ப்புகளை விளைவுகளாக மாற்ற, அந்த நாட்டின் விருப்பமும் தேவை. இந்தியாவுடன் உடனடி சமாதானத்தின் அவசியத்தை பாகிஸ்தானும் சீனாவும் உணரவில்லை என்றாலும், டெல்லியுடன் ஒரு புதிய மற்றும் பரந்த உறவை உருவாக்க வாஷிங்டன் ஆர்வமாக இருந்தது.டாக்டர் மன்மோகன் சிங்குடன் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர். (எக்ஸ்பிரஸ் போட்டோ).பி.வி. நரசிம்ம ராவ் மற்றும் வாஜ்பாய் ஆகியோர் பாகிஸ்தான், சீனா மற்றும் அமெரிக்காவுடன் பல வெளிப்புற நெருக்கடிகளைச் சமாளித்து, புதிய அணுகுமுறைகளைக் கையாண்டனர். இதில் 1998-ல் வாஜ்பாய் ஐந்து அணு ஆயுதங்களைச் சோதனை செய்ததும் அடங்கும். இப்படிப்பட்ட ஒரு சாதகமான சூழ்நிலையைப் பெற்ற சிங், மூன்று நாடுகளுடனும் ராஜதந்திர உறவை மேம்படுத்த முழு முயற்சி எடுத்தார்.ஏப்ரல் 2005-ல் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் டெல்லியில் ஒரு கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதற்காக வருகை தந்தது, காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண ஒரு வாய்ப்பை வழங்கியது. காஷ்மீர் தொடர்பான தீவிர மறைமுக பேச்சுவார்த்தைகள் – இந்தியத் தரப்பில் இருந்து தூதர் சதீந்தர்  லாம்பா-வால் நடத்தப்பட்டாலும், ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.காங்கிரஸ் கட்சியின் தலைமை பாகிஸ்தானுடனான உறவை மேம்படுத்துவதில் விருப்ப மில்லாமல் இருந்தது. மன்மோகன் சிங்-கை பாகிஸ்தானுக்குச் செல்லக்கூட அக்கட்சி அனுமதிக்கவில்லை. டெல்லி தயங்கியதால், வாய்ப்புகள் நழுவ ஆரம்பித்தன, பாகிஸ்தானில் முஷாரப்பின் அதிகாரம் குறையத் தொடங்கியது. நவம்பர் 2008-ல் மும்பை மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பிறகு, இரு நாடுகளின் உறவுகள் மீண்டும் நெருக்கடி நிலைக்குத் திரும்பியது.டெல்லியின் ஒரு வலுவான அரசியல் விருப்பம் 2005-07 காலப்பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் உறவை ஒரு புதிய திசையில் கொண்டு சென்றிருக்குமா என்று இப்போது யூகிப்பது அர்த்தமற்றது. ஆனால் பாகிஸ்தானுடனான ஒரு நல்ல ராஜதந்திர வாய்ப்பு இழக்கப் பட்டது என்பது மட்டும் மறுப்பதற்கில்லை.டாக்டர் மன்மோகன் சிங் உலக வங்கியின் தலைவர் லூயிஸ் டி பிரஸ்டனுடன் 1992-ல் உரையாடுகிறார் (எக்ஸ்பிரஸ் போட்டோ).ஏப்ரல் 2005-ல் சீனப் பிரதமர் வென் ஜியாபோ டெல்லிக்கு வருகை தந்தார், மேலும் டெல்லிக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான தீர்க்க முடியாத எல்லைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான கொள்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். உண்மையில், இப்படி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும்.ஆனால் பின்பு பெய்ஜிங் ஒப்பந்தத்தின் சரத்துக்களை தனக்குச் சாதகமாக விளக்கம் செய்யத் தொடங்கியதால், எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் விரைவிலேயே ஸ்தம்பித்தன. இந்தியா ஒரு தீர்வுக்கு ஆர்வமாக இருந்தபோதிலும், 2000-களின் நடுப்பகுதியில் சீனாவின் வலுவான படைபலம் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு  விரிவடைந்தது, அதன் காரணமாக பெய்ஜிங் தயக்கம் காட்டியது.ஜி ஜின்பிங்கின் கீழ் வேகமாக வளர்ந்து வரும் சீனா, அரசியல் ரீதியாக ஒரு முடிவுடன் செயல்பட ஆரம்பித்தது மற்றும் அதன் அண்டை நாடுகளுடனான எல்லைத் தகராறுகளைத் தீர்க்க தனது படைபலத்தை வெளிப்படுத்தத் தொடங்கியது, இதன் விளைவாக, சீன-இந்திய உறவும் ஒரு சிக்கலான பாதையில் புகுந்தது. இது தொடர்ச்சியான இராணுவ நெருக்கடிகளில் பிரதிபலித்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் முடிவுபெரும் சமயத்தில், 2013-ல் முதல் பெரிய எல்லை மோதல் ஏற்பட்டது.மன்மோகன் சிங்கின் அமெரிக்கத் தொடர்பு மிகவும் வித்தியாசமாகவும், விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் அமைந்தது. மார்ச் 2005-ல், ஜனாதிபதி ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் காண்டலீசா ரைஸ், இந்தியாவுடனான நீண்டகால அணுசக்தி சர்ச்சையைத் தீர்ப்பதாக உறுதியளித்து டெல்லி வந்தார். இதுவே, ஆசிய பாதுகாப்பு  அமைப்பை மறுசீரமைப்பதற்கான  அமெரிக்கா எடுத்த புதிய முயற்சியின் ஒரு பகுதியாகஇந்தியாவுடன் கைகோர்க்கக் காரணமாகியது.அதன் பிறகு விரைவான ராஜதந்திர நடவடிக்கைகள் தொடர்ந்தன, டில்லியும் வாஷிங்டனும் ஜூன் 2005-ல் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்திலும், ஜூலை 2005-ல் ராணுவமல்லாத அணுசக்தி முயற்சியிலும் கையெழுத்திட்டன. அமெரிக்காவுடனான புதிய ராஜதந்திர உறவின் அளவும் சாத்தியமும் காரணமாக யு.பி.ஏ-க்கு ஆதரவு அளிக்கும் இடதுசாரிகளின் கடுமையான எதிர்ப்பு காங்கிரஸ் கட்சியை உலுக்கியது.  வாஜ்பாய் அமெரிக்காவுடன் ஒரு தெளிவான அணுசக்தி உறவை உருவாக்கியிருந்தார், ஆனால், அத்வானியின் பா.ஜ.க அமெரிக்காவுடனான சிங்கின் வரலாற்று முக்கியம் வாய்ந்த இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தது. இடதுசாரிகளும் பாஜகவும் மன்மோகன் சிங் அரசைக் கவிழ்ப்பதற்குக் கைகோர்த்தன.முன்னாள் அமெரிக்க செயலாளர் டாக்டர் ஹென்றி கிஸ்ஸிங்கர், 2004ல் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கை சந்தித்தபோது. (எக்ஸ்பிரஸ் போட்டோ)அரசாங்கம் சவாலில் இருந்து தப்பியது, ஆனால் காங்கிரஸ் தலைமைக்கு அமெரிக்காவுடனான அணுசக்தி முயற்சியை முடிப்பதற்கு வேண்டிய அரசியல் தைரியம் இல்லை. மன்மோகன் சிங்கின் ராஜினாமா அச்சுறுத்தல் காரணமாகவே காங்கிரஸ் கட்சி 2008-ல் இந்த முயற்சியை முறைப்படுத்தியது.அவர் 2009-ல் ஒரு பெரிய வெற்றியுடன் பிரதமராக திரும்பிய போதிலும், சிங் அமெரிக்காவுடனான பல புதிய ஒப்பந்தங்களை செயல்படுத்த போராட நேரிட்டது. அந்தத் திட்டத்தில் காங்கிரஸ் தலைமைக்கு அரசியல் ஆர்வம் இல்லாததே அதற்குக் காரணமாகும். தனது கட்சியின் வெளியுறவுக் கொள்கையின் மீது முழுக் கட்டுப்பாட்டுடன் மக்களவையில் பெரும்பான்மையை அனுபவித்த நரேந்திர மோடியின் அரசாங்கமே அமெரிக்காவுடனான ராஜதந்திர உறவை உயர்த்த முடிந்தது.எவ்வாறாயினும், 2008-ல் சிங் மிகுந்த நம்பிக்கையுடன் தனது முத்திரையை இந்த முயற்சிக்கு பதித்தாதிருந்திருந்தால், தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்க உறவை விரைவாக மாற்றி  இருந்தாலும் கூட, நிச்சயமாக மோடி அரசாங்கத்திற்கு அதை மேலெடுத்துச் செல்ல மிகவும் கடினமாகவே இருந்திருக்கும்.பரவலான அரசியல், அறிவுசார் மற்றும் அதிகாரத்துவ எதிர்ப்புகளுக்கு இடையே அமெரிக்க உறவை இந்தியாவிற்கு ஆதரவு அளிக்கும் விதமாக திருப்பியது பிரதம மந்திரியாக மன்மோகன் சிங் படைத்த மிகப் பெரிய சாதனை, இது என்றும் அவருடைய ராஜதந்திர மரபாகப் போற்றப்படும். இது 1990-களில் இந்தியாவின் பொருளாதார எழுச்சிக்கு அவரது பங்களிப்பை முழுமையாக்கி, அவரது நிர்வாகத் திறனை வலுப்படுத்தியது.வாஷிங்டனில் இந்த உறவை விரும்பிய தலைவர்களே – அடுத்தடுத்த அமெரிக்க அதிபர்களான ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா, டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் –  அமெரிக்காவை இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க தோழமை நாடாக மாற்ற உதவினர். சிங் அல்லது மோடிக்கு பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் அத்தகைய அதிர்ஷ்டம் இல்லை, இவை இரண்டும் இந்தியாவுக்கு பெரும் சவால்களாகவே உள்ளன.இறுதியில், மன்மோகன் சிங்கின் ராஜதந்திரம் இரண்டு முக்கியமான படிப்பினைகளை எடுத்துக் காட்டுகிறது. ஒன்று, ஒரு இறையாண்மையானது ராஜதந்திர வாய்ப்புகளை தவற விடாது கைப்பற்றுவதன் முக்கியத்துவம். மற்றொன்று, கிடைக்கும் ராஜதந்திர தருணங்களை நீடித்த அரசியல் பயன் தரும் விளைவுகளாக மாற்றுவதற்கு வெளிநாட்டுக் கொள்கையில் உறுதியான உள்நாட்டு அரசியல் கருத்தொற்றுமை தேவை என்பதாகும்.மொழிபெயர்ப்பு: எம்.கோபால். இந்த கட்டுரையை எழுதிய டாக்டர் சி. ராஜா மோகன், தி இந்தியன் எக்ஸ்பிரஸில் பன்னாட்டு விவகாரங்களில் பங்களிக்கும் ஆசிரியர் ஆவார்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version