இந்தியா

மன்மோகன் சிங்கின் முதுகில் குத்திய மிடில் கிளாஸ் – ஆனந்த் சீனிவாசன் வேதனை பேட்டி!

Published

on

மன்மோகன் சிங்கின் முதுகில் குத்திய மிடில் கிளாஸ் – ஆனந்த் சீனிவாசன் வேதனை பேட்டி!

இந்தியாவின் நிதியமைச்சர், இரண்டு முறை பிரதமர் என நாட்டின் உயரிய பொறுப்பு வகித்த டாக்டர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி காலமானார். அவரது இறுதிச்சடங்கு டெல்லியில் இன்று (டிசம்பர் 28) முழு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது.

இந்த நிலையில் அவரது சாதனைகள் குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் நமது மின்னம்பலம் யூடியுப் தளத்தில் விரிவாக பகிர்ந்து கொண்டார்.

Advertisement

“இந்தியாவுக்கு இரண்டாவது சுதந்திரம் கொடுத்தவர் மன்மோகன் சிங் தான். அவர் இல்லையென்றால் இன்று ஊடகம் மற்றும் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சி இந்தளவுக்கு இருந்திருக்காது. அன்று அவர் தாராளமயத்தை கொண்டுவராவிட்டால் இந்தியாவில் இன்று வேலைவாய்ப்பின்மை பெரும் தலைவலியாய் அமைந்திருக்கும்.

1991ஆம் ஆண்டு நிதியமைச்சராக அவர் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, இந்தியாவிடம் மொத்தம் 2,500 கோடி ரூபாய் மட்டுமே கையிருப்பு இருந்தது. நாட்டுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான தொகை 15 நாட்களுக்கு மட்டுமே இருந்தது.

வேலை போன பிறகு கையில் வெறும் 15 நாட்களுக்கு மட்டுமே உங்கள் கையில் காசு இருக்கும் போது என்ன நிலையோ அதே நிலைதான் அன்று நாட்டில் இருந்தது.

Advertisement

இதை எப்படி சமாளிக்கப் போகிறார் என்பது தான் அன்று அவருக்கு இருந்த சவால். ஆனால், அதையெல்லாம் புரட்டி போட்டு இந்தியாவை இன்று வல்லரசு நாடாக ஆக்கிய முழு பெருமைக்கு காரணம் மன்மோகன் சிங் தான்.

அவர் நிதியமைச்சராக பொறுப்பேற்ற போது பொருளாதார தாராளமயமாக்கலை இந்தியாவில் கொண்டுவந்தார். அப்போது பிரதமராக இருந்த நரசிம்ம ராவ் சொன்னது இதுதான் ‘நீங்கள் செயல்படுத்தும் திட்டத்தில் வெற்றி கிடைத்தால் அது எனது தலைமையிலான ஆட்சிக்கு நற்பெயர், தவறாக மாறினால் உங்கள் பொறுப்பு’ என்று தெரிவித்தார்.

மன்மோகன் சிங் நிதியமைச்சராக பொறுப்பேற்ற போது, அவரது நண்பர்கள் எல்லாம், ‘இந்த பொறுப்பை ஏற்க வேண்டாமே’ என தயக்கம் தெரிவித்தனர். ஆனால், அவர் அப்போது சொன்னது தான் வரலாற்றில் முக்கியமானது. ‘சாதாரண ஊரில் பிறந்த எனக்கு, இந்த நாடு தான் ஸ்காலர்ஷிப் கொடுத்து படிக்க வைத்தது. பல உயர் பதவிகளில் அமர்த்தி என்னை அழகு பார்த்தது. அதனால் இந்த நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக இந்த பதவியை பெற்றுக்கொண்டேன். இந்தியாவின் வரலாற்றில் என் பெயரும் ஒரு அடிக்குறிப்பிலாவது இடம்பெறும்” என்று தான் தெரிவித்தார்.

Advertisement

என் அப்பா, அம்மா ‘நாங்கள் நேருவின் காலத்தில் இருந்தோம் என்று சொல்லுவார்கள். அதே மாதிரி, மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தப்போதும், பின்னர் இரண்டு முறை பிரதமராக இருந்தபோதும், அவரது பொன்னான அட்சியில் நாங்கள் இருந்தோம்’ என்று பெருமையாக நான் சொல்வேன்.

ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும், வட இந்திய மேல் சாதியினருக்கும் அவர் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் பிடிக்கவில்லை. இன்னும் ஓப்பனாக சொல்ல வேண்டும் என்றால், கல்வியை யார் வேண்டுமானாலும் படிக்க முடியும் என்ற நிலையை கொண்டு வந்தார்.

நாடு முழுவதும் கல்லூரி அதிகம் திறக்கப்பட்டது. பொறியியல் படித்து ஐடியில் வேலை பார்க்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இன்று 10 கோடிக்கும் அதிகமான பேர் ஐடித் துறையை நம்பி உள்ளனர். சாமனியன் மகனும் நாளை நமக்கு சமமாக வந்து அமர்வான் என்ற உண்மையை தான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் வட இந்திய மேல் சாதியினரால் ஏற்க முடியவில்லை. அதனால் வினோத் ராய், அன்னா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை செட்டப் செய்து மன்மோகன் சிங் ஆட்சியில் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டி அவரை காலி செய்தார்கள்.

Advertisement

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்று இப்போது ஒன்றும் இல்லை. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து சமூகவலைதளங்களில் என்ன எழுதுகிறார்கள் தெரியுமா? அவர்களை பற்றி தமிழ்நாட்டில் மட்டுமல்ல வட இந்தியர்கள் கூட பாராட்டி எழுதுவதை பார்க்க முடியாது.

மன்மோகன் சிங் பணக்காரர்களிடம் இருந்து வரியை வாங்கி ஏழைகளிடம் கொடுத்தார். பாஜக அரசு ஏழைகளிடம் இருந்து வரியை வாங்கி பணக்காரர்களிடம் கொடுக்கிறது. இது தான் வித்தியாசம்.

பணக்காரர்களிடம் வரி போட்டு தான் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம், உணவு பாதுகாப்பு சட்டம், நாடு முழுவதும் மதிய உணவு திட்டம், ஐஐடி, ஐஐஎம் கல்வி நிறுவனங்களை உருவாக்கி, அதில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார். கல்வி கடன் கிடைக்க செய்தார். ஆதார் கொண்டுவந்ததும் மன்மோகன் தான்.

Advertisement

இன்று நாம் அனைவரும் பயன்படுத்தும் யுபிஐ பண பரிமாற்ற வசதி அவரது காலத்தில் கொண்டுவரப்பட்டது. எனினும் தனது 92 வயதிலும் இதற்கு நான் தான் காரணம் என்று கிரெடிட் எடுக்கவே இல்லை. அவர் தான் மிடில் கிளாஸ் சமூகத்தை உருவாக்கியது. ஆனால் ஆர்,எஸ்.எஸும், இந்தி மேல் சாதிக்காரர்களையும் நம்பி மிடில் கிளாஸ் அவரை முதுகில் குத்தி விட்டார்கள்.

இன்றைக்கும் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் கட்சியினர் மதிப்பு கொடுக்கின்றனர். ஆனால், அத்வானிக்கு பாஜகவில் இன்று என்ன நிலைமை என்று அனைவருக்கும் தெரியும்.

மன்மோகன் சிங் பலவீனமானவர் என்று மீண்டும் மீண்டும் மக்கள் மத்தியில் கூறியது ஆர்.எஸ்.எஸ் அமைப்பும், மேல்சாதி கார்ப்பரேட் மீடியாவும் தான். இதை புரிந்துகொள்ள வேண்டும். இவர் மேல்சாதியை சேர்ந்தவர் அல்ல.

Advertisement

அவரை எல்லோரும் முதலில் பாராட்டினார். ஆனால், எப்போது அவர் பணக்காரர்களிடம் இருந்து வரி போட்டு ஏழைகளுக்கு கொடுத்தாரோ, அப்போது முதல் அவரை பற்றி நெகட்டிவான கருத்துகள் மக்கள் மத்தியில் புகுத்தப்பட்டது.

மன்மோகன் சிங் முனைவர் பட்டம் பெற்றதே, இந்தியாவின் எக்ஸ்போர்ட் மார்க்கெட் பற்றி தான். பியூசி இரண்டாவது வருடம் முடிக்கும் போது அவருக்கு மெடிக்கல் சீட் கொடுத்தார்கள். ஆனால், அவர் ‘நான் பொருளாதாரம் தான் படிக்க போகிறேன். அந்த பொருளாதாராத்தால் ஏழைகளின் வாழ்வை மாற்றப் போகிறேன்’ என்று முடிவெடுத்தார்.

அவர் நினைத்திருந்தால் கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி இருக்கலாம். அமர்த்தியா சென் போன்று நோபல் பரிசு வாங்கியிருக்கலாம். ஆனால், அதை அனைத்தையும் விட மக்களுக்கு சேவை செய்யனும்னு தான் அரசியலுக்கு வந்தார். அவர் எப்போதுமே நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று வந்தார்” என்று ஆனந்த் சீனிவாசன் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version