இந்தியா

டிஜிட்டல் திண்ணை: கண்ணீர் விட்ட ராமதாஸ்… அன்புமணியை வரச் சொன்ன சரஸ்வதி அம்மா… தைலாபுரத்தில் நடந்த குடும்பப் பஞ்சாயத்து!

Published

on

டிஜிட்டல் திண்ணை: கண்ணீர் விட்ட ராமதாஸ்… அன்புமணியை வரச் சொன்ன சரஸ்வதி அம்மா… தைலாபுரத்தில் நடந்த குடும்பப் பஞ்சாயத்து!

வைஃபை ஆன் செய்ததும் பாமகவின் நிறுவனரும், தலைவரும் தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்துக் கொண்ட காட்சிகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

Advertisement

“டிசம்பர் 28 ஆம் தேதி பாமகவின் 2025 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸும்,  தலைவர் அன்புமணியும் நேருக்கு நேர் மோதிய காட்சிகள் பரபரப்பாக பேசப்பட்டன.

இதையடுத்து இன்று காலை அன்புமணி தைலாபுரம் தோட்டத்துக்கு சென்று டாக்டர் ராமதாஸை சந்தித்துப் பேசினார். பாமக வரலாற்றில் அக்கட்சியின் நிறுவனரை, தலைவர் சந்தித்துப் பேசியதாக செய்தி வெளியானது இதுதான் முதல் முறை.

பொதுக்குழு முடிந்த நேற்றில் இருந்தே தைலாபுரம் தோட்டத்தில் பஞ்சாயத்துகள் தொடங்கிவிட்டன. நேற்று மாலை தைலாபுரம் தோட்டத்துக்கு முகுந்தனின் தாயார் ஸ்ரீ காந்தியும், தந்தை டாக்டர் பரசுராமனும் சென்றனர்.  டாக்டர் ராமதாஸின் மூத்த மகள்தான் ஸ்ரீகாந்தி. அவரது கணவரான டாக்டர் பரசுராமன்… டாக்டர் ராமதாஸின் அக்கா மகன். இருவர் மீதும் மிகுந்த பாசம் கொண்டவர் ராமதாஸ்.

Advertisement

எந்த அளவுக்கு என்றால் ஆரம்ப காலத்தில் தான் திண்டிவனத்தில் நடத்தி வந்த மருத்துவமனையை, அரசியல் சமுதாயப் பணிகள் காரணமாக தொடர்ந்து கவனிக்க இயலாத சூழலில், தனது அக்கா மகனான டாக்டர் பரசுராமனிடம்தான் ஒப்படைத்தார் டாக்டர் ராமதாஸ். இவர்களைப் போலவே பேரன் முகுந்தன் மீதும் டாக்டருக்கு பேரன்பு உண்டு. அதன் காரணமாகத்தான் அவரை இளைஞரணித் தலைவராக நியமித்தார்.

பொதுக்குழுக் கூட்டத்தில்  மோதல் வெடித்த பிறகு, தைலாபுரம் தோட்டத்துக்கு சென்றுவிட்டார் டாக்டர் ராமதாஸ். சில மணித்துளிகளிலேயே முகுந்தனின் தாய் தந்தையரான ஸ்ரீகாந்தி, பரசுராமன் தம்பதியர் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸை சந்தித்தனர்.

‘முகுந்தனுக்கு இப்போது எந்த பதவியும் வேண்டாம். அப்புறம் பாத்துக்கலாம்’ என்று அவர்கள் சொல்ல… டாக்டர் ராமதாஸ் தனது மூத்த மகளிடம் கண்ணீர் மல்க பேசியிருக்கிறார். அவரை மூத்த மகள், திருமதி சரஸ்வதி ராமதாஸ் உள்ளிட்டோர் சமாதானப்படுத்தியிருக்கிறார்கள்.

Advertisement

பிறகு அன்புமணிக்கு போன் போட்ட அவரது தாயார் சரஸ்வதி, ‘ஐயா வருத்தத்துல இருக்காங்க. நீ உடனே புறப்பட்டு வீட்டுக்கு வா’ என்று அழைத்திருக்கிறார். இதன் பேரில்தான் இன்று (டிசம்பர் 29) காலை தைலாபுரம் தோட்டத்துக்கு சென்றார் அன்புமணி.

அப்போது டாக்டர் ராமதாஸ், ‘ஏற்கனவே எனக்கு நீண்ட வருட நண்பரான ஜி.கே.மணியின் மகன் குமரனை இளைஞரணித் தலைவரா நியமிச்சேன். நீ அதை ஏற்கலை. அதனால அவரும் போயிட்டாரு. இப்ப முகுந்தனை நியமிச்சேன். அதையும் எதிர்க்கிறாய். அதனால் முகுந்தனும், அவரது அப்பா அம்மாவும் எந்த பதவியும் வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டாங்க. அந்த பதவியைக் கொடுத்தால் அது முகுந்தனுக்குத்தான். அதுவரை இளைஞரணித் தலைவர் பதவி காலியாகவே இருக்கட்டும்’ என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார். இதையடுத்து அன்புமணி எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

அதே நேரம் பாமக இளைஞரணித் தலைவர் பதவிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. கணேஷ்குமார் போன்றவர்களை நியமிக்கலாமா என்று தனக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் அன்புமணி ஆலோசனை நடத்தியிருக்கிறார். ஆனால் குடும்பத்தினரோ இப்போதைக்கு இந்த இளைஞரணித் தலைவர் விஷயமாக எந்த முன்னெடுப்பும் எடுக்க வேண்டாம் என்று அன்புமணியிடம் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement

பாமக இளைஞரணித் தலைவராக முகுந்தனே மீண்டும் நியமிக்கப்பட்டால் அது டாக்டர் ராமதாஸுக்கு கிடைத்த வெற்றி ஆகும்.  முகுந்தன் அல்லாத வேறு ஒருவர் நியமிக்கப்பட்டால் அது அன்புமணிக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படும். இப்போதைய நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையின்படி  டாக்டர் ராமதாஸ் – அன்புமணி இருவருக்கும் இடையிலான மேட்ச் டிராவில் முடிந்திருக்கிறது என்கிறார்கள் பாமக நிர்வாகிகள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version