இந்தியா
பொதுக்குழு கூட்டத்தில் மோதல்… ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு!
பொதுக்குழு கூட்டத்தில் மோதல்… ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு!
பாமக பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி இடையே நேற்று (டிசம்பர் 28) மோதல் வெடித்த நிலையில், இன்று (டிசம்பர் 29) இருவரும் தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்தனர்.
பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுச்சேரியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், “பாமக மாநில இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் நியமிக்கப்படுகிறார்” என்று ராமதாஸ் அறிவித்தார்.
இதற்கு மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, “அவர் கட்சிக்கு வந்தே நான்கு மாதம் தான் ஆகிறது. அவருக்கு என்ன அனுபவம் இருக்க போகிறது. அவருக்கு எதுக்கு இந்த பதவி” என்று கேட்டார்.
உடனே கோபமான ராமதாஸ், “ இது என் கட்சி. நான் சொல்வது தான் இங்கே நடக்கும். யாருக்கு பிடிக்கவில்லையோ வெளியே போ” என்றார்.
இதையடுத்து அன்புமணி, ”பனையூரில் எனக்கு அலுவலகம் வைத்திருக்கிறேன். மூன்றாவது தெருவில் திறந்திருக்கிறேன். என்னை பார்க்கிறவர்கள் அங்கு வைத்து எப்போது வேண்டுமானாலும் பாக்கலாம்” என்று நிர்வாகிகள் மத்தியில் தெரிவித்தார்.
பொதுக்குழு கூட்டம் முடிந்த பிறகு ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்றுவிட்டார். அன்புமணி ராமதாஸ் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கரையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார்.
பாமக பொதுக்குழுவில் நடந்த இந்த மோதல் அக்கட்சியினர் மத்தியிலும் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தசூழலில் ராமதாஸை சந்திக்க பனையூரில் உள்ள தனது வீட்டில் இருந்து இன்று காலை 11 மணியளவில் அன்புமணி புறப்பட்டார். மதியம் 12.45 மணியளவில் தைலாபுரம் வந்தடைந்தார்.
ஏற்கனவே பாமக கெளரவக்குழு தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு, பாமக மாநில பொருளாளர் திலகபாமா, பாமக சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் ராமதாஸ் இல்லத்திற்கு வந்தனர்.
ராமதாஸ், அன்புமணி இடையே கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில், இந்த சந்திப்பானது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.