இந்தியா

மாணவி பாலியல் வன்கொடுமை: அதிமுக போராட்டம்… காவல்துறை ஆக்‌ஷன்!

Published

on

மாணவி பாலியல் வன்கொடுமை: அதிமுக போராட்டம்… காவல்துறை ஆக்‌ஷன்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று (டிசம்பர் 30) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் நுழைவுவாயில் முன்பாக அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

இதனை தொடர்ந்து டிசம்பர் 27-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு காரணமாக ஆர்ப்பாட்டமானது இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நேற்று (டிசம்பர் 30) மாலை யாரும் எதிர்பாராத வேளையில் அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் யார் அந்த சார்? என்ற பதாகையை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுகவின் இந்த போராட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்தசூழலில், தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள யார் அந்த சார்? போஸ்டரை போலீசார் அகற்றி வருகின்றனர். மேலும், போஸ்டர் ஒட்டுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

Advertisement

மேலும், இன்று நடைபெறும் அதிமுக போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்காமல், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்ய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தநிலையில், சென்னை மாவட்டம் நீங்கலாக தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

விழுப்புரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

Advertisement

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், “மூன்றரை ஆண்டுகளாக திமுக ஆட்சியில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள், சிறுமிகள், வயதானவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்.

திமுக அரசின் காவல்துறை முற்றிலுமாக செயழிலந்துவிட்டது. ஜனநாயக நாட்டில் போராடுவதற்கு கூட உரிமையில்லை. பாலியல் வன்கொடுமை வழக்கில் தைரியமாக புகாரளித்த பெண்ணை தமிழக மக்கள் பாராட்ட வேண்டும்.

கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பவர்களை காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை. ஆனால், எங்களை கைது செய்ய மட்டும் அதிகளவில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் 35 ஆயிரம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்தோம். காவல்துறையை காட்டி எங்களை பயமுறுத்த முடியாது” என்று தெரிவித்தார்.

Advertisement

மதுரை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய செல்லூர் ராஜூ, “திமுக ஆட்சிக்கு வந்தது முதல் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது.

மாணவி பாலியல் வன்கொடுமையில் சார் என்ற நபர் ஒருவர் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணே புகார் கொடுத்திருக்கிறார். இந்த விவகாரத்தில் சென்னை ஆணையர் பேட்டி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

தமிழகத்தில் எத்தனையோ குற்றங்கள் நடக்கிறது. ஆனால், ஆணையர் அதற்கெல்லாம் பேட்டி கொடுத்தாரா? இன்றைக்கு சார் என்ற நபரை காப்பாற்ற திமுக அரசு காவல்துறையை பகடைக்காயாக பயன்படுத்துகிறதோ என்று சந்தேகம் வருகிறது”
என்று தெரிவித்தார்.

Advertisement

வேலூர் மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் அப்பு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அதேபோல, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

இதேபோல, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நெல்லை, கடலூர் என தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version