இந்தியா

“யார் அந்த சார்?” : எடப்பாடிக்கு கோவி செழியன் பதில்!

Published

on

“யார் அந்த சார்?” : எடப்பாடிக்கு கோவி செழியன் பதில்!

அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில், “யார் அந்த சார்” என கேட்டு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உயர்க்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் பதில் கொடுத்துள்ளார்.

அண்ணா பல்கலை மாணவி கடந்த டிசம்பர் 23ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். மாணவி அளித்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த ஞானசேகரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement

இந்தநிலையில் மாணவியிடம் தவறாக நடந்து கொண்டபோது, சார், சார் என ஞானசேகரன் போனில் பேசியதாக மாணவியின் வாக்குமூலத்தில் சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அப்படி யாரும் பேசவில்லை என்று சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கமளித்திருந்தார்.

இருப்பினும், “அந்த சாரை” காப்பாற்ற போலீசார் முயல்கிறார்கள் என்று அதிமுக, பாஜகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.

Advertisement

இன்று (டிசம்பர் 30) அண்ணா பல்கலை மாணவி வழக்கில் திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில். “யார் அந்த சார்?” என போஸ்டர் ஒட்டி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “ ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்து அராஜக அடக்குமுறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் குரலின் பிரதிபலிப்பான எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முயலும் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம். கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய வழக்கில் திமுகவை சேர்ந்தவர், போதைப்பொருள் மாபியா வழக்கில் திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளர், என நீளும் திமுக நிர்வாகிகளின் குற்றப்பின்னணியாலும்,
ஞானசேகரன் குறித்து வெளிவரும் புகைப்படங்கள் மற்றும் தகவல்களாலும், திமுக அரசு இந்த வழக்கிலும் ஏதேனும் அரசியல் தலையீடு ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுக்கிறது.

Advertisement

அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும்! இந்த வழக்கில் ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த நபர் யார்?யார்_அந்த_SIR ?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு தனது எக்ஸ் பக்கம் வாயிலாக பதிலளித்துள்ள உயர்க் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், “முதலமைச்சராக இருந்தபோது 13 அப்பாவி பொதுமக்களைக் காக்கைக் குருவிகளைச் சுடுவதைப் போல சுட்டுக் கொன்றதையே டி.வி.யைப் பார்த்து தெரிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி இன்னும் திருந்தாமல் பத்திரிகைகளில் வந்த கிசுகிசுவை அடிப்படையாக வைத்து போராட்டம் என்ற பெயரில் மக்களை வாட்டி வதைக்கிறார்.

திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் உயர்கல்வி பயில்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதைச் சிதைக்கும் வகையில் சார் யார்? என்று இல்லாத ஒன்றைக் கேட்டு அரசியல் ஆதாயம் தேடுகிறார்.

Advertisement

இன்று கூட திராவிட மாடல் அரசின் முன்னோடி திட்டமான புதுமைப்பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று முடித்து உயர்கல்வி பயில்வோருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

பாலியல் புகார்களில் பெண்கள் காவல்துறையினரிடம் புகார் அளிக்கவே அஞ்சி நடுங்கிய நிலை திராவிட மாடல் ஆட்சியில் மாற்றப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலாக புகார் தருகிறார்கள். அவர்களை மீண்டும் அச்சுறுத்தும் விதமாகத்தான் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை அரசியலையும் போராட்ட நாடகத்தையும் மக்கள் பார்க்கிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version