இந்தியா
லேசர் வெளிச்சத்தில் மின்னும் வள்ளுவர் சிலை… கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார் ஸ்டாலின்
லேசர் வெளிச்சத்தில் மின்னும் வள்ளுவர் சிலை… கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார் ஸ்டாலின்
குமரியில் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 30) திறந்து வைத்தார்.
நாட்டின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையொட்டி சுற்றுலா வரும் பயணிகளின் வசதிக்காக ரூ.37 கோடி ரூபாய் செலவில் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம் கட்டப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தூத்துக்குடி, கன்னியாகுமரியில் கள ஆய்வு பணிக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்றுநாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன்படி நேற்று தூத்துக்குடி வந்த ஸ்டாலின், திமுகவினர், பொதுமக்களின் உற்சாக வரவேற்புடன் இன்று மதியம் சாலை வழியாக கன்னியாகுமரி சென்றடைந்தார். படகு மூலம் திருவள்ளுவர் பாறையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் சென்றார்.
அங்கு திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலத்தை திறந்து வைத்து அதில் நடந்து சென்று ஸ்டாலின் பார்வையிட்டார்.
தொடர்ந்து அய்யன் திருவள்ளுவர் உருவச் சிலையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள “பேரறிவுச் சிலை” (Statue of Wisdom) அலங்கார வளைவினை திறந்து வைத்தார்.
அதன்பின் அய்யன் திருவள்ளுவர் உருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், அய்யன் திருவள்ளுவர் உருவச் சிலையின் பாதங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதனை பின்னர் திருவள்ளுவர் உருவச் சிலையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பூம்புகார் விற்பனையகத்தைத் திறந்து வைத்தார். தொடர்ந்து பேரறிவுச் சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் திருக்குறள் நெறி பரப்பும் 22 தகைமையாளர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய், பாராட்டுச் சான்றிதழை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.