இந்தியா
குமரியில் கண்ணாடி பாலம் கட்டியது யார்? – எடப்பாடிக்கு எ.வ.வேலு பதில்!
குமரியில் கண்ணாடி பாலம் கட்டியது யார்? – எடப்பாடிக்கு எ.வ.வேலு பதில்!
மனதில் திட்டத்தை நினைத்துக்கொண்டு தூங்கிவிட்டு, இப்போது வந்து ’அதுதான் என் திட்டம்’ என்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமிக்கு எ.வ.வேலு பதிலடி கொடுத்துள்ளார்.
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி ரூ.37 கோடி செலவில், திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (டிசம்பர் 30) திறந்து வைத்தார். இது தற்போது சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கண்ணாடி பாலம் திட்டம் அதிமுக ஆட்சிக் காலத்தில் நான் முதல்வராக இருந்த போது கொண்டுவரப்பட்டது. அப்போது கடல்வழி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த நிதின் கட்கரியிடம் இதுதொடர்பாக கோரிக்கை வைத்தேன்.
அவருக்கு பின் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சரான மன்சுக் மாண்டவியாவிடமும் இந்த கோரிக்கையை வைத்தேன். மூன்று நாட்களிலேயே இதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் கொரோனா வந்துவிட்டதால் அதையடுத்து பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது ஸ்டாலின் மாடல் அரசு டெண்டர் விட்டு, அந்த பணிகளை செய்துள்ளது” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் எடப்பாடியின் இந்த கருத்து தொடர்பாக கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு பதில் தெரிவித்துள்ளார்.
அவர், “முன்னாள் அதிகாரிகள் சொல்கிற சில தவறான தகவல்களை வைத்து எடப்பாடி பழனிசாமி இப்படி பேசி வருகிறார்.
திருவள்ளுவர் சிலையில் இருந்து விவேகானந்தர் பாறைக்கு கண்ணாடி பாலம் அமைக்கும் திட்டத்தை பொறுத்தவரை அதிமுக ஆட்சியில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதனை யாரும் நடைமுறைப்படுத்த வரவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் இந்த திட்டம் தூசி தட்டி எடுக்கப்பட்டது. ஒப்பந்தங்கள் கோரப்பட்டு டெண்டர் உறுதிசெய்யப்பட்டது. அதன்பின்னர் நான் பலமுறை நேரில் சென்று பார்வையிட்டு எந்த இடத்தில் பாலம் அமைக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தாரருடன் பேசி இடம் நிர்ணயிக்கப்பட்டது.
ஹைதராபாத்தை சார்ந்த நிறுவனம் மூலமாக தான் டிபிஆர் தயார் செய்தோம். திட்ட மதிப்பீடு எல்லாம் தயார் செய்த பிறகு ஒப்பந்ததாரருக்கு ஆணை வழங்கப்பட்டது. அதற்கு பின் இங்கு திட்டப்பணிகளை தொடங்குவதற்கு கூட நான் இங்கு வந்திருக்கிறேன்.
மனதில் ஒரு திட்டத்தை நினைத்துக்கொண்டு தூங்கிவிட்டு, இப்போது வந்து ’அதுதான் என் திட்டம்’ என்பதில் எந்த அர்த்தமும் இல்லை.
திட்டத்தை யார் செயல்படுத்துகிறார்கள், யார் அதற்காக பணம் ஒதுக்கினார்கள், எந்த பணத்தில் ஒதுக்கினார்கள் என்பது தான் முக்கியம்.
சட்டசபையில் நிறைய பேர் அறிவிப்பார்கள். கட்டப் போவதாக சொல்வார்கள். அப்படி சொல்வதால் அவர்கள் பாலம் கட்டியதாக அர்த்தமில்லை.
குமரி முனையில் கண்ணாடி பாலம் திராவிட மாடல் ஆட்சியில் தான் கட்டப்பட்டது. அதற்கு பணம் ஒதுக்கியது முதல்வர் மு.க.ஸ்டாலின். அவருடைய ஆட்சியில் தான் கட்டப்பட்டது.
எடப்பாடி அவர் இருப்பிடத்தை காட்டிக் கொள்வதற்காக ஒவ்வொரு நாளும் இதுபோன்று ஏதாவது ஒன்றை சொல்லிக் கொண்டிருக்கிறார்” என்று எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.