இந்தியா

டிஜிட்டல் திண்ணை: அமித்ஷா – எடப்பாடி… ஆரம்பமானது ரகசிய பேச்சு!

Published

on

டிஜிட்டல் திண்ணை: அமித்ஷா – எடப்பாடி… ஆரம்பமானது ரகசிய பேச்சு!

வைஃபை ஆன் செய்ததும் தமிழக பாஜக உட்கட்சித் தேர்தல் பற்றிய தகவல்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துக்கொண்டே வாட்ஸப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது,

“தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சிக்கு உட்கட்சி தேர்தல்கள் நடந்து வருகின்றன. இன்னும் ஒரு வார காலத்துக்குள் அனைத்து மாநிலங்களுக்கும் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

Advertisement

இந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்வார் என்று அவரது தரப்பினரும், தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிரான வலிமையான கூட்டணி அமைக்கும் விதமாக அதிமுகவோடு அனுசரணையான ஒருவர் மாநில தலைவராக வருவார் என்றும் இருவேறு கருத்துக்கள் தமிழக பாஜகவில் உலவிக் கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில், புத்தாண்டு வாழ்த்து சொல்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள், வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு மீண்டும் அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி திமுகவுக்கு எதிராக வலிமையாக கட்டமைக்கப்படும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

இது குறித்து அதிமுக தரப்பில் விசாரித்த போது, ‘2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக வலிமையான அணியை அமைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முயற்சித்து வருகிறார். இதற்காக விஜய் தரப்புடன்  பூர்வாங்கமாக  சில தகவல் பரிமாற்றங்கள் நடந்தன.

Advertisement

எடுத்த எடுப்பிலேயே விஜய் கட்சி தரப்பில் 100 சீட்டு கேட்டார்கள். இதுவரை தேர்தலையே எதிர்கொள்ளாத ஒரு குதிரை மீது இவ்வளவு  நம்பர்களையா பந்தயமாக கட்ட முடியும் என எடப்பாடி ஆலோசித்தார். 30 இடங்களிலிருந்து அதிகபட்சம் 45 இடங்கள் வரை தரலாம் என அதிமுக தரப்பில் செய்தி அனுப்பப்பட்டது. ஆனால், விஜய் தரப்பில் 80 இடங்களுக்கு குறையவில்லை. இதனால் அந்த தகவல் பரிமாற்றங்கள் அப்படியே விடப்பட்டன.

இந்த நிலையில் தான் பாஜக டெல்லி மேலிடத்தின் சார்பில் அமித் ஷா வட்டாரத்திலிருந்து எடப்பாடி பழனிசாமியை பக்குவமாக அணுகினார்கள். திமுகவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் வலிமையான கூட்டணி ஏற்படுத்த வேண்டும்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நாங்கள் ஹாண்டில் செய்து கொள்கிறோம். நீங்கள் அது விஷயமாக எந்த வருத்தமும் கவலையும் பட வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அமித்ஷாவிடம் இருந்து செய்திகள் அனுப்பப்பட்டன.

Advertisement

இந்த அடிப்படையில் 2021 சட்டமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியை மீண்டும் கட்டி எழுப்பலாமா என தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசனையை தொடங்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

அவரது வாதம் என்னவென்றால்… 2021 சட்டமன்ற தேர்தல் என்பது பத்து வருட அதிமுக ஆட்சிக்குப் பிறகு நடைபெற்ற தேர்தல். பத்து வருட ஆட்சிக்கு எதிரான மக்கள் மனநிலை, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட உட்கட்சி குழப்பங்கள் இவற்றையெல்லாம் கடந்து அதிமுக சுமார் 70 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றது.  இது மிகப்பெரிய விஷயம்.

அந்தத் தேர்தலில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையிலான வாக்கு  வித்தியாசம் வெறும் 4% தான். பல இடங்களில் சொற்ப வாக்கு எண்ணிக்கையில்தான் திமுக வெற்றி பெற்றது. காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்ததால் சிறுபான்மையினர் ஓட்டுக்கள் சிந்தாமல் சிதறாமல் திமுகவுக்கு சென்றன. அதேபோல அரசு ஊழியர்கள் வாக்கும் திமுகவை நோக்கிச் சென்றது.

Advertisement

வருகிற சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த விஜய் தனியாக நிற்கும் நிலையில் அவர் திமுகவுக்கு விழுகிற சிறுபான்மையினர் ஓட்டுகளில் கணிசமாக பிரிப்பார். கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு ஊழியர்கள் திமுகவை நம்பி ஏமாந்து விட்டார்கள். அதனால் அவர்களும் முழுமையாக திமுகவை ஆதரிக்க மாட்டார்கள்.

இந்த அடிப்படையில் விஜய் வந்தாலும், வராவிட்டாலும் பரவாயில்லை…  2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை கொண்ட கூட்டணி அமைத்ததை போல மீண்டும் அமைக்கலாம் என்பது தான் எடப்பாடியின் இப்போதைய மன ஓட்டம்.

அமித் ஷா தரப்பு எடப்பாடிக்கு அனுப்பிய சில உத்தரவாதங்களின் அடிப்படையில் இதில் அடுத்தக்கட்ட டெவலப்மென்ட்கள் ஏற்படும். இது ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் பொங்கலுக்குப் பிறகு மாநிலம் முழுதும் திமுக அரசுக்கு எதிரான வலிமையான போராட்டங்கள், தொகுதி வாரியான சுற்றுப் பயணம் என்று வேகவேகமாக செயல்படவும் திட்டமிட்டு அது தொடர்பான ஆலோசனைகளிலும் ஈடுபட்டிருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள் அதிமுக தரப்பில்”என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது  வாட்ஸ் அப்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version