இலங்கை
யாழ்ப்பாணத்தில் காற்று மாசு கட்டுக்குள்!
யாழ்ப்பாணத்தில் காற்று மாசு கட்டுக்குள்!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக காற்றுமாசு உயர்வடைந்திருந்த நிலையில், அது தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்று மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்ததாவது:
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் வளித்தரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. நவம்பர் மாதம் 28ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் காற்றுமாசு நிலை (சுட்டெண்) அதிகளவில் ஏற்பட்டிருந்த நிலையில், டிசெம்பர் மாதம் 2ஆம் திகதிமுதல் நிலைமை மெல்லமெல்ல இயல்புக்குத் திரும்புகின்றது.
காற்றின் வடிவம் மாறி வீசுகின்றபோது (மாறுபட்ட சுழற்சி நிலை) அயல் நாடுகளில் இருந்து மாசுத் துணிக்கைகள் அதிகளவில் எடுத்து வரப்படுகின்றன. இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையே காற்றுமாசை அதிகப்படுத்தியிருந்த நிலையில், தற்போது நிலைமை கட்டுக்குள் வருகின்றது.
காற்றின் வழித்தரச் சுட்டெண் 50க்கு உட்பட்டதாக இருந்தால் அது ஆரோக்கியமான நிலையாகக் காணப்படும். 50 தொடக்கம் 100 வரை ஓரளவு பாதிப்பு நிலையாகவும், 100 தொடக்கம் 150 வரை கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் சிறுவர்களை பாதிக்கும் நிலையாகவும் காணப்படும். இலங்கையில் இத்தகைய காற்றுமாசே ஏற்பட்டிருந்தது.
காற்றுமாசு அதிகரிக்கின்றபோது, அதனை எதிர்கொண்டு மக்களை சுகாதார நிலையில் பேணிப் பாதுகாக்க சர்வதேச நிறுவனங்கள், தேசிய நிறுவனங்களுடன் இணைந்து நாம் பணியாற்றுகின்றோம். மேலும் வளியின் தரத்தைக் கண்காணிக்க வளித்தர உணரிகளை மையமாக வைத்து செயற்பாடுகளை மேற்கொள்கின்றோம் – என்றார். (ப)