இலங்கை

2 வருடங்களின் முன் இறந்தவரின் சடலம் இன்று தோண்டியெடுப்பு!

Published

on

2 வருடங்களின் முன் இறந்தவரின் சடலம் இன்று தோண்டியெடுப்பு!

இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்தவரின் சடலத்தை மீளத் தோண்டியெடுத்து உடற்கூற்றுப் பரிசோதனை நடத்துமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜேசுதாசன் ரஞ்சித்குமார் (வயது 40) என்ற மேற்படி நபர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மன்னார் – இலுப்பை கடவை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்துள்ளார். இதன் பின்னர் நவாலிப் பகுதியில் வசித்துவந்த அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வந்துள்ளார்.

Advertisement

இந்த நிலையில் இரண்டு வருடங்களின் முன்னர் அவர் உயிரிழந்திருந்தார். அவரது சடலம் கல்லூண்டாய் சென். பீற்றர்ஸ் தேவாலய சேமக்காலையில் அடக்கம் செய்யப்பட்டது.

விபத்துத் தொடர்பான அவருடைய வழக்கு மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துள்ளது. வழக்கொன்று நிலுவையில் உள்ளபோது, அந்த வழக்கோடு தொடர்புடையவர் உயிரிழந்ததை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்ற பின்னரே சடலத்தை அடக்கம் செய்ய வேண்டும். ஆனால், வழக்கு இறுதியாக அழைக்கப்படும் வரையில் அவர் உயிரிழந்த விடயம் மன்னார் மாவட்ட நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கப்படவில்லை.

இறுதித் தவணையின்போதே வழக்குடன் தொடர்புடையவர் உயிரிழந்துவிட்டார் என்ற விடயம் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
எனவே, உரிய நீதிமன்ற நடவடிக்கைகள் பின்பற்றப்படாததைத் தொடர்ந்து, சடலத்தைப் புதைத்த இடம் மல்லாகம் நீதிமன்றத்தின் நியாய ஆதிக்க எல்லைக்கு உட்பட்டதென்பதால் இதுகுறித்து மல்லாகம் நீதிமன்றத்துக்கு அறிவித்தல் வழங்கப்பட்டது.

Advertisement

இதையடுத்தே, மல்லாகம் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அந்த நபரின் சடலம் இன்று தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பப்படவுள்ளது.

மல்லாகம் நீதிமன்ற நீதிவான், சட்ட மருத்துவ அதிகாரி, தடயவியல் பொலிஸார் உள்ளிட்ட தரப்பினரின் முன்னிலையில் இன்று சடலம் மீளத் தோண்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  (ப)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version