இந்தியா

அமைச்சர் முத்துசாமியின் தீவிர ஆதரவு ஒன்றிய செயலாளர் திடீர் ராஜினாமா… ஏன்?

Published

on

அமைச்சர் முத்துசாமியின் தீவிர ஆதரவு ஒன்றிய செயலாளர் திடீர் ராஜினாமா… ஏன்?

ஈரோடு மாவட்டம் கொடுமுடி வடக்கு திமுக ஒன்றிய செயலாளர் மு.சின்னசாமி தனது பதவியை ராஜினாமா செய்து மாசெவும் அமைச்சருமான முத்துசாமியிடம் இன்று (ஜனவரி 3) கடிதம் கொடுத்திருப்பதாக கொங்கு திமுகவில் வேகமாக தகவல் பரவி வருகிறது.

இந்த ஒன்றிய செயலாளர் சின்னசாமி ஏற்கனவே சர்ச்சைகளில் சிக்கியவர்தான். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் அப்போதைய திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பாஜகவிடம்  தோல்வியுற்றார். .

Advertisement

தனது தோல்விக்கு காரணமானவர்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு  அவர் கடிதம் எழுதினார். அதில் இந்த ஒன்றிய செயலாளரும் இடம்பெற்றிருந்தார். ஆனாலும் சுப்புலட்சுமி  ஜெகதீசன்தான் கட்சியை விட்டு விலக நேரிட்டதே தவிர, அமைச்சர் முத்துசாமியின் தீவிர ஆதரவாளர் என்பதால் மீண்டும் ஒன்றிய செயலாளராகவே தொடர்ந்தார் சின்னசாமி.

இந்த நிலையில்,  கடந்த வாரம் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவின் மகளிரணியைச் சேர்ந்த ஒரு பெண் நிர்வாகி ஒன்றிய செயலாளர் மீது கட்சித் தலைமைக்குப் புகார் அனுப்பியுள்ளார்.

மேலும், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ், மாவட்டச் செயலாளாரும் அமைச்சருமான முத்துசாமி ஆகியோருக்கும் புகார் அனுப்பினார். தன் புகார் மீது நடவடிக்கை இல்லையென்றால் போலீசுக்கும் போவேன் என்று அப்போதே அவர் தெரிவித்திருந்தார்.

Advertisement

இந்த நிலையில், ஒன்றிய செயலாளர் சின்னசாமியை மையமாக வைத்து சில வீடியோக்களும் ஈரோடு திமுகவின் முக்கிய நிர்வாகிகளுக்குள் மெல்ல மெல்ல கசிந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். அவையெல்லாம் வெளியே வந்தால் கட்சிக்கு கடும் கெட்டப் பெயர் ஏற்படும் என்பதை உணந்த அமைச்சர் முத்துசாமி, ‘உங்க பதவியை ராஜினாமா செய்திடுங்க… இல்லேன்னா விஷயம் வெடிச்சு உங்கள அடிப்படை உறுப்பினர் பதவியை விட்டே தலைமை நீக்கிடும் சூழ்நிலை வரலாம்’ என்று சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து அந்த ஒன்றிய செயலாளர், ‘நான் பதவியை ராஜினாமா செய்யவேண்டுமென்றால் என் மகனுக்கு அல்லது என் ஆதரவாளருக்கு ஒன்றிய செயலாளர் பதவியை தரவேண்டும்’ என்று நிபந்தனை விதித்திருக்கிறார். முத்துசாமியின் தீவிர ஆதரவாளர் என்பதால், அவர் உரிமையோடு இந்த நிபந்தனையை விதித்ததாக திமுக வட்டாரங்களில் கூறுகிறார்கள்.   

நான்கைந்து நாட்கள் நடந்த பஞ்சாயத்துக்குப் பிறகு, ‘உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ராஜினாமா’ செய்வதாக இன்று கடிதம் எழுதி வாங்கியிருக்கிறார் மாசெவான அமைச்சர் முத்துசாமி என்கிறார்கள் ஈரோடு மாவட்ட திமுக  புள்ளிகள்.

Advertisement

ஈரோடு தாண்டி கொங்கு வட்டாரம் முழுதும் திமுகவின் நிர்வாகிகள் மத்தியில் இதுதான் இப்போது பேச்சாக இருக்கிறது. அறிவாலயத்துக்கும் இந்த தகவல் முழுமையாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version