இந்தியா
ரயிலில் மாற்றுத்திறனாளி மீது தாக்குதல் : ஆர்.பி.எஃப் காவலர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ரயிலில் மாற்றுத்திறனாளி மீது தாக்குதல் : ஆர்.பி.எஃப் காவலர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
மாற்றுத்திறனாளி பெட்டியில் போதையில் ஏறி, மாற்றுத்திறனாளி நபரை கன்னத்தில் அறைந்த ஆர்.பி.எஃப் தலைமை காவலர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தென்மருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. மாற்றுத்திறனாளியான இவர் புத்தாண்டையொட்டி நேற்று மன்னார்குடி ரயிலில் சென்னை நோக்கி மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் அமர்ந்து வந்துகொண்டிருந்தார்.
அப்போது ரயில் கொராடாச்சேரி ரயில் நிலையத்திற்கு வந்தபோது, மதுபோதையில் மாற்றுத்திறனாளி பெட்டியில் ஏற முயன்ற ஆர்.பி.எஃப் போலீஸ் ஒருவர், கதவைத் திறக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் அங்கிருந்த மாற்றுத்திறனாளி பெண் பயணிகளை கருத்தில் கொண்டு கருணாநிதி கதவை திறக்கவில்லை.
அதனால் அடுத்த பெட்டியில் ஏறிக்கொண்ட அந்த மதுபோதை ஆசாமி, அடுத்த ரயில் நிலையமான திருவாரூர் வந்ததும் மீண்டும் மாற்றுத்திறனாளிகள் பெட்டிக்கு வந்து, ’ஆர்.பி.எஃப்-ன்னு சொல்றேன், கதவ திறக்க மாட்டியா..?’ என அதட்டியுள்ளார்.
உடனே அங்கிருந்த பெரியவர் கதவை திறந்து விட, உள்ள நுழைந்த மது போதை ஆசாமி, கருணாநிதியின் கன்னத்தில் சரமாரியாக தாக்கினார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே தாக்குதலுக்குள்ளான கருணாநிதி சிதம்பரம் ஆர்.பி.எஃப் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்படி மதுபோதையில் தாக்கிய ஆர்.பி.எஃப் தலைமை காவலர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.