இந்தியா

விக்கிரவாண்டி: பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி!

Published

on

விக்கிரவாண்டி: பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் எல்.கே.ஜி படிக்கும் மூன்று வயது குழந்தை லியா லட்சுமி கழிவுநீர் தொட்டியில் இன்று (ஜனவரி 3) தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியைச் சேர்ந்த பழனிவேல், சிவசங்கர் தம்பதியரின் மூன்று வயது குழந்தை லியா லட்சுமி. அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்துள்ளார்.

Advertisement

இன்று மதியம் மாணவி பள்ளியில் உள்ள கழிவறைக்கு சென்று திரும்பியபோது, அருகில் இருந்த கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளார். கழிவுநீர் தொட்டியின் மீது அமைக்கப்பட்டிருந்த தகர ஷீட் சிதிலமடைந்து இருந்ததாகவும், சிறுமி அந்த ஷீட்டின் மீது ஏறி நின்றபோது உள்ளே விழுந்ததாகவும் தெரிகிறது.

கழிவுநீர் தொட்டிக்குள் குழந்தை விழுந்ததை அறிந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், மாணவி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தை உயிரிழந்த தகவல் அறிந்து, பள்ளி முன்பாக மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெற்றோர் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement

குழந்தை உயிரிழப்புக்கு காரணமான தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version